ஒரே சபையில் ஒரே தேவனுடைய ஐக்கியம் The Unity Of One God In The church 58-1221e [சகோ. பிரன்ஹாம் பரிசுத்த யோவான் 17- ஆம் அதிகாரத்தை வாசிக்கும்படி சகோ. நெவிலை கேட்டுக்கொள்கிறார்- ஆசி] ‘ இயேசு இவைகளைச் சொன்ன பின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து: பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன். பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும். நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள். நீர் எனக்குத் தந்தவைகளெல்லாம் உம்மாலே உண்டாயினவென்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள். நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள். நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே. என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன், நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும். நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக் கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக் கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை. இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாய் அடையும்படி உலகத்தில் இருக்கையில் இவைகளைச் சொல்லுகிறேன். நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது. நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல. உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன். அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்ட வர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன். நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக் கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன். அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும் படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக் கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன். நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள். நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும் படிக்கும், நானும் அவர்களிலிருக்கும் படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.’ 2. (சகோதரர் நெவில், “பரிசுத்த யோவான் எழுதின சுவிசேஷம் 17-ஆம் அதிகாரம். வாசிக்கப்பட்ட வேதவாக்கியத்தோடு கர்த்தர் தாமே தம்முடைய ஆசீர்வாதத்தைக் கூட்டுவாராக” என்கிறார். (ஒலிநாடாவில் காலியிடம்...) சகோதரர் நெவில், “தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக! சகோதரர் பிரன்ஹாமே” என்று கூறுகிறார் - ஆசி]. 3. சகோதரர் நெவில், உமக்கு நன்றி. சகோதரர் நெவில், கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக! 4. நானும் சகோ. நெவிலை போலத் தான் இருக்கிறேன். நான் அதைப் பெற்றுக்கொண்டேன்... அந்த பரிசைத் திறப்பதற்கு கிறிஸ்துமஸ் வரைக்கும் என்னால் காத்திருக்க முடியவில்லை. முதிர்வயதில் தோன்றும் இரட்டிப்பு குழந்தைத் தன்மை (once the man and twice the child) என்பதைப் பற்றி நீங்கள் அறிவீர்களே. ஆனால், நிச்சயமாகவே சகோதரர் நெவில் அவருடைய புதிய உடையில் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். 5. நான் என் ஜீவிய காலத்தில் பார்த்ததிலேயே அழகான மேலங்கிகளில் ஒன்றை இங்கேயுள்ள இந்த சபையிலிருந்து பெற்றுக்கொண்டேன். நிச்சயமாகவே நான் அதை பாராட்டுகிறேன். உண்மையாகவே நான் என்னவாய் இருக்கிறேனோ, அதைக் காட்டிலும் சற்று பெரியதாக நீங்கள் என்னை மதிப்பிடுகிறதற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். ஆனால் நாளை, அவர்கள் சற்று சிறிய அளவு கொண்ட மேலங்கியை எனக்குத் தருவார்கள் என்று நான் நம்புகிறேன். எந்த மனிதனுக்குமே அணிவதற்கு சற்று பெரிய அளவுள்ள மேலங்கியாக அது இருக்கிறது. வேதாகமத்தில், மனிதனுக்கு மிகவும் சிறியதாய் இருந்த போர்வை அல்லது படுக்கையைப் பற்றி நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். ஏறத்தாழ அந்த வழியாகத்தான் இங்கே என்னிடம் இருக்கும் இந்த மேலங்கியானது சற்று பெரியதாக இருக்கிறது. ஆனால் அது நிச்சயமாகவே அழகுள்ளதாய் இருக்கிறது. சற்று சிறிய அளவுள்ள, எனக்குக் கச்சிதமாய் பொருந்துகிற மற்றொரு மேலங்கியை அவர்கள் அங்கே வைத்திருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். நானும் அதை அணிந்து கொண்டு, அவர் (நெவில்) செய்ததைப் போலவே நானும் அதை காண்பிப்பேன். 6. ஒரு மேலங்கி ஒன்றை அணிந்து கொண்டு பிரசங்கித்த நாட்களை நான் கண்டிருக்கிறேன். நல்லது, அதை அணிந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய ஜீவியகாலம் முழுவதும் நல்ல ஒரு மேலங்கி எனக்கு இருந்ததில்லை. ஒரு நல்ல மேலங்கியை நான் சொந்தமாக கொண்டிருப்பது இதுவே முதன்முறையாகும். 7. இந்த சபையிலிருந்து முதலாவது வெளியே சென்ற என்னுடைய பயணத்தை இந்த சபை ஞாபகங்கொண்டிருக்குமா என்று நான் ஆச்சரியப்படுகிறேன். அன்றொரு நாள் இரவுப்பொழுதில், இந்த சபையிலிருந்து செயின்ட் லூயிஸ் (St. Louis) என்ற இடத்திற்கு, ராபர்ட் டாஹர்ட்டி-யின் (Robert Daugherty) மகளை நான் சந்திக்கச் சென்றபோது, அது என்னவாக இருந்தது என்று உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? இப்பொழுது, சகோதரி மற்றும் சகோதரர் ஸ்பென்சர் (Sis. and Bro. Spencer) அவர்களால் அதை நினைவுப்படுத்த முடியும் என்று நான் யூகிக்கிறேன். இங்கே சகோ. ராய் ஸ்லாட்டர் (Roy Slaughter) மற்றும் அநேகர்... எனக்கு ஒரு மேலங்கி கூட இல்லாதிருந்தது. என்னுடைய பயணச்சீட்டுக்காக சபையானது பதினொரு டாலர்களை திரட்டியது. பின்னர், என்னுடைய சகோதரனுடைய மேலங்கியை நான் கடனாக வாங்கினேன். ஆனால், அது எனக்கு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு பெரிய அளவில் இருந்தது. நான் அதை அணிகையில், பார்ப்பதற்கு மிகவும் மோசமானதாய் தோற்றமளித்ததால், அதை மடித்து வைத்துவிட்டேன். இனிமேல் எந்த மேலங்கியும் வேண்டாம் என்கிற அளவிற்கு நான் மோசமான உணர்வுக்குள்ளாகி அதை நான் அப்படியே மடித்து வைத்துவிட்டேன். நான் இரண்டு நாட்கள் அங்கே இருந்தேன். நான் அங்கே இருந்த போது, கர்த்தர் அசைவாடத் தொடங்கி, சிறிய சகோதரி பெட்டி-யை (Betty) சுகமாக்கினார். 8. உங்களுக்கு தெரியுமா, சிறிது காலத்திற்கு முன்பு நான் அவளைச் சந்தித்தேன். இப்பொழுது, அவள் ஒரு அழகான வாலிப ஸ்திரீயாக இருக்கிறாள். செயின்ட் வைடஸ் டான்ஸ் (Saints Vitus’ dance) என்ற வியாதியினால் அவள் பாதிக்கப்பட்டு, நாட்கணக்காக முன்னும் பின்னும் இழுத்துக்கொண்டு, ஒரு விலங்கைப்போல கிடத்தப்பட்டிருந்தாள். சிறந்த மருத்துவர்கள் அவளைக் கைவிட்டுவிட்டனர். அந்த நாள் மற்றும் அந்த சாயங்காலத்தில் நான் அங்கே தங்கினேன். செய்ய வேண்டியது என்ன என்பதைக் குறித்ததான ஒரு தரிசனத்தைக் கர்த்தர் காண்பித்து, மேலும், “அவர்கள் அதைச் செய்த மாத்திரத்தில் சிறிய பெட்டி (Betty) விடுதலையாக்கப்படுவாள்” என்று கூறினார். 9. நான் அந்த ஊழியக்காரரையும், அவருடைய தகப்பனாரையும் எழுந்து நிற்கும்படி கூறினேன். நான் அந்த சீமாட்டியினிடத்தில், “அன்றொரு நாள் நீ இந்த நகரத்தில் இருந்து சிறிய உலோகத்தட்டுகளை (Pans) வாங்கிக் கொண்டிருந்தாய். ஒரு நீல நிறமான கிரானைட் உலோகத்தட்டு ஒன்றை நீ வாங்கினாய். அது உன்னுடைய சாமான்கள் வைக்கும் அறைகளில், கீழ்புறமாக இருக்கிறது. நீ அதை அங்கே வைத்ததிலிருந்து அதை நகர்த்தவே இல்லை” என்று கூறினேன். 10. “அது சரியே” என்று அவள் பேச ஆரம்பித்தாள். 11. நான், “போய் அதை எடுத்து, தண்ணீ ரினால் நிரப்பி, ஒரு சிறிய வெள்ளை துவாலையை (towel) எடுத்துக்கொண்டு, இங்கே வா. இதோ, கர்த்தர் உரைக்கிறதாவது, சிறிய பெட்டி (Betty) சுகமாக்கப்படுவாள்” என்றேன். மேலும்... 12. [சபையாரிலிருந்து சகோ. ராய் ஸ்லாட்டர், “சகோ. பிரன்ஹாமே, சரியாக தென்படுமென்றால், நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன்” என்கிறார்). சரி கூறுங்கள். (“உமக்குத் தெரியுமா, நீர் அங்கே இருந்த போது, நான் உம்மை அழைத்தது உமக்கு நினைவிருக்கிறதா? எங்களுடைய பிள்ளை வியாதியாய் இருந்தாள். நீர் உம்முடைய மனைவியை அழைத்து அவளிடத்தில் கூறினீர்... நல்லது, முதலில், நான் உம்மை அழைத்து, 'மருத்துவ அதிகாரிகளுக்கு அங்கே எந்த நம்பிக்கையுமே இல்லையென்று ஏற்கெனவே ஐந்து மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்' என்ற ஒரு செய்தியை கூறினேன்.”) ஆம். (“நீர் உள்ளே வந்தபோது, ‘சகோ. ஸ்லாட்டரிடத்திலிருந்து ஒரு அழைப்பு இருக்கிறது, எனக்கு இருக்கின்ற சிறந்த நண்பர்களில் ஒருவர்' அல்லது அதைப்போல ஏதோவொன்றை நீர் கூறினீர்.”] ஆம் ஐயா! [“பிறகு நீர் சென்று ஜெபித்தீர். நீர் உம்முடைய மனைவியை அழைத்து அவளிடம், “அவர்களை அழைத்து அந்தப் பிள்ளை நன்றாக இருப்பாள் என்று கூறு” என்றீர். நீங்கள் பாருங்கள், பிள்ளை சுகவீனமாய் இருக்கிறாள் என்பதைக் கூட அவள் அப்பொழுது அறியாதவளாக இருந்தாள்.”] ஆம். (“பின்னர் அதற்கடுத்த நாள் அவள் (பிள்ளை - மொழிபெயர்ப்பாளர்) மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவளாய் அங்கிருந்தாள். மருத்துவர்கள் வந்தனர். அவர்கள் வந்து, “ஏதோவொன்று... ஏதோவொறு காரியம் சம்பவித்து இருக்கிறது” என்று கூறினார்கள். அவள், “ஆம்” என்றாள். மருத்துவர்கள் தங்கள் வேலையைத் தொடர ஆரம்பித்தனர், ஒருக்கால் தாங்கள் செய்திருந்த சிகிச்சையின் பேரில் கவனம் செலுத்தியிருக்கலாம். அவளோ, “அவ்விதம் இல்லை, சகோதரர் பிரன்ஹாமுடைய ஜெபங்களே அதைச் செய்தது” என்றாள்.”] ஆம், அது எனக்கு நினைவிருக்கிறது. [“அவளுக்கு ஜுரம் இருந்தது. அங்கே ஐந்து மருத்துவர்கள் இருந்தும் அவர்களால் அது என்ன என்பதைக் கண்டறிய முடியவில்லை. நான் வயல்வெளியிலிருந்து உம்மை அழைக்கலாம் என்று வந்துகொண்டிருந்தேன். அப்பொழுது என் மனைவியும் உம்மை அழைக்கும்படிச் சொல்வதற்காக ஒரு பிள்ளையை என்னிடத்தில் அனுப்பியிருந்தாள். அவளும் அங்கே வந்து, 'சகோதரன் பிரன்ஹாமை அழைக்கும்படி சொல்ல வந்திருக்கிறேன்' என்றாள்.”) ஆம் ["அது ஒரு நிகழ்வு பொருத்தமாக (coincidence) இருந்தது. நாங்கள் வயல்வெளியில் சந்தித்தோம். பிறகு நான் உம்மை அழைத்தபோது நீர் ஜெபத்தில் இருந்தீர். அதன் பிறகு நீர் என்னை திரும்ப அழைத்து, 'அந்த பிள்ளையிடம் நீ நன்றாகி விடுவாய் என்று சொல்' என்றீர். மேலும், இப்பொழுது அவள் சுகமாய் இருக்கிறாள்” என்றார்.) ஆம். 13. தேனே! அது உனக்கு நினைவிருக்கும் என்று நான் யூகிக்கிறேன், அப்படித்தானே? நாம் செயின்ட் லூயிஸ் என்ற இடத்தில் அந்த கூட்டத்தில் இருந்த போது சகோதரர் ஸ்லாட்டரின் சிறிய மகள் மிகவும் வியாதியுற்றிருந்தாள். நாம் அந்த பழைய பெல்ச்சர் பாத் விடுதியில் (Belcher Bath Hotel) இருந்தோம். என்னால் அதைத் தெளிவாக ஞாபகப்படுத்திப் பார்க்க முடிகிறது. நாம் அந்த செய்தியோடு, கர்த்தருக்கு முன்பாக சென்றோம். அவர் தரிசனத்தைக் காண்பித்து, காரியங்களைக் கூறினார். பிறகு நான் சகோதரர் ஸ்லாட்டர் மற்றும் அவர்களை அழைத்தேன். “அவர்களை அழைத்து, 'கர்த்தர் உரைக்கிறதாவது. கவலைப்படாதீர்கள், அவள் ஜீவிப்பாள்'” என்பதை அவர்களிடம் சொல்லுங்கள்” என்று கூறினேன். அவள் குணமானாள். கர்த்தர் மிகவும் நல்லவராக இருந்தார். 14. அப்பொழுதிலிருந்து அநேகக் காரியங்கள் நடந்திருக்கிறது. ஆனால் அவர் இன்னும் அதே கர்த்தராகிய இயேசுவாகவே இருக்கிறார், அவர் அவ்விதம் இல்லையா? மிகவும் அற்புதமானவர்! அதை அறிவதைக் காட்டிலும் மேலானதாக எந்தவொன்றைக் குறித்தும் என்னால் நினைத்துப் பார்க்க முடியாது. இந்த உலகம் தனக்குச் சொந்தமாகக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு பணத்தையும் நான் சுதந்தரிக்கப் போவதாக இருந்தாலும், இங்கே பூமியின் மீது ஒரு ஆயிரம் ஆண்டு காலத்துக்கு உயிர் வாழப்போவதாக இருந்தாலும்கூட, நான் சரியாக இப்பொழுது பெற்றிருக்கிற நித்திய ஜீவனைக் குறித்தே அறிந்துக் கொள்வேன். சதாகாலங்களிலுமுள்ள ஜீவன்(everlasting life) என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் முடிந்து விடும். நித்திய ஜீவனுக்கோ(eternal) முடியவில்லை, ஏனென்றால் அதற்கு தொடக்கம் என்பது கிடையாது. ஆகவே நாம் அதற்காக நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்.. 15. சகோதரர் நெவில் பரிசுத்த யோவான் எழுதின புத்தகத்திலிருந்து சில வேத வாக்கியங்களை எனக்காக சற்றுமுன் வாசித்தார். அங்கே ஒரு வேதவசனம் இருந்தது, 21-வது வசனம், நான் உங்களுடைய கவனத்தை சற்று அதன் பேரில் வைக்கும்படி விரும்புகிறேன். இயேசு அவருடைய ஜெபத்தில் இவ்வாறு ஜெபித்தார். அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறது போல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். 16. நான் ஒரு பாடப்பொருளைக் கொடுக்க வேண்டுமென்றால், அதை இவ்வாறு அழைக்க விரும்புகிறேன்: ஒரே சபையில் ஒரே தேவனுடைய ஐக்கியம். 17. உங்களுக்குத் தெரியுமா, தேவன் மனிதனை சாதிக்கவே உருவாக்கியிருக்கிறார். அதற்காகவே மனிதன் உண்டாக்கப் பட்டான். அனைத்து ஜீவிய காலங்களினூடாகவும் மனிதன் ஏதோவொன்றை அடையவே முயற்சி செய்திருக்கிறான். அவனுடைய சாதனைகள், அவன் அதை முயற்சி செய்கிற காரணம் என்னவென்றால், அவ்வண்ணமாக செய்யும்படிக்கே அவன் வடிவமைக்கப்பட்டுள்ளான் (designed). அந்த விதமாகவே, தேவன் மனிதனை உண்டாக்கினார். ஆனால் அந்த சாதனையை அடைவதில், அதிலுள்ள தொல்லை என்னவென்றால், அவன் தானாகவே ஏதோவொன்றைச் செய்ய முயற்சிக்கிறான். அங்கே தான் மனிதன் தன்னுடைய தவறைச் செய்தவனாய், தொல்லையில் அகப்பட்டுக் கொள்ளுகிறான். 18. இப்பொழுது ஆதியிலே, வேதாகமத்தின் மூலப்பொருளாகிய (seed chapter) ஆதியாகமத்தில், தேவன் ஒரு மனிதனை உண்டாக்கின போது, மனிதன் என்னவாய் இருக்க வேண்டும் என்று தேவன் அறிந்திருந்தாரோ, அதே விதத்திலேயே அவனை உண்டாக்கினார் என்பதை நாம் காண்கிறோம். மேலும், மனிதன் என்னவாய் இருக்கிறானோ அதைக்காட்டிலும் மேன்மையான வடிவமைப்பாக (design)அவனால் ஒருபோதும் இருக்க முடியவில்லை. அவர் உயிரினங்களை சிருஷ்டிக்கத் தொடங்கினபோது, அவர் மிகச் சிறிய ஜீவனிலிருந்து உண்டாக்கினார். அது ஏறத்தாழ தலைபிரட்டை, தவளை, அப்படியாக வந்து தேவனுடைய சாயலாக இருக்கிற மிகவும் உயர்ந்த ஜீவனாகிய மனிதனை உண்டாக்கினார். 19. அதன் பிறகு இந்த ஜீவியத்தில், மனிதன் காரியங்களை சாதித்துக்காட்ட தொடங்கினான். ஆனால் அவன் அதைச் செய்தபோது, தேவனைக் காட்சியிலிருந்து வெளியேற்றத் தொடங்கினான். அவன் சுயநலமான நோக்கங்களைக் கொண்டிருக்கத் தொடங்கினான். அவன் அதைச் செய்தபோது, அவன் தனக்கான ஏதோவொன்றைச் சிந்திக்கத் தொடங்கினான். தேவன் மனிதனை வைத்திருந்ததான இந்தக் கிரகத்தை அவன் கெடுத்துப்போடுமட்டும் அந்த சாதனைகள் நீடித்திருக்கவில்லை என்பதை நாம் காண்கிறோம். அதாவது, அவனை உண்டாக்கின சிருஷ்டிகர், அவனை உண்டாக்கினதற்காக தம்முடைய இருதயத்தில் விசனப்படும் அளவிற்கு, அவன் பூமியை அப்படிப்பட்டதான ஒரு நிலைக்கு கொண்டு வந்து விட்டான். தேவன் மனிதனை தம்முடைய சாயலில், அவருக்காக ஏதோவொன்றைச் செய்யும்படியான விதத்தில் அவனை உண்டாக்கியும், அவனுக்கு ஆளுகையைக் கொடுத்தும் கூட, அவனோ தன்னுடைய முழு பெலத்தையும், தன்னுடைய முழு வல்லமையையும், அவனுடைய சுயநலமான வாஞ்சைகளையும் சாதனைகளையும் அடைவதற்காகவே உபயோகப்படுத்தினதை தேவன் கண்டபோது, எப்படிப்பட்டதான உணர்வை அவர் அடைந்திருப்பார் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். 20. பின்னர், நோவாவையும் அவன் குடும்பத்தையும் தவிர மற்ற எல்லாவற்றையும் தேவன் ஜலப்பிரளயத்தினால் அழித்துப்போட்டார் என்று வேதாகமம் நமக்கு கூறுகிறது போல, அந்தக் காலக்கட்டத்தில் தண்ணீரினால் முழு பூமியையும் அழிப்பதன் மூலமாக, மனிதனுக்கு தேவன் கற்பித்த அந்த மகத்தான பாடத்திற்கு பிறகு, தொடர்ந்து அது மிக நீண்ட நாட்கள் செல்லவில்லை என்று காண்கிறோம். பிறகு அந்த மகத்தான பாடத்திலிருந்து வெளியே வந்தவுடன்.... 21. ஒரு கடினமான பாதையின் ஊடாக மட்டுமே ஒரு மனிதனால் கற்றுக் கொள்ள முடியும் என்பதாக அது தோன்றவில்லை. நம்முடைய பிள்ளைகளிடமும் கூட நாம் அதேக் காரியத்தைக் காண்கிறோம். அநேக நேரங்களில் அவர்களை புரிதலுக்குட்படுத்த, கடுமையான முறையில் நாம் அவர்களை தண்டிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். துவக்கத்திலேயே மனிதன் தனக்குள்ளாக ஒரு முற்றிலும் தோல்வியடைந்தவனாய் இருப்பதையே அது காட்டுகிறது. மனிதன் தேவனுடனான தன்னுடைய ஐக்கியத்தை இழந்தபோது, அவன் மனிதனையே சார்ந்திருக்கும் ஒரு பிரிவாக தன்னை மாற்றிக்கொண்டான் (he become a unit of his own) அதற்கு பின் அவன் தேவனைச் சார்ந்திருக்கவில்லை. அவன் தனக்குத்தானே ஏதோவொன்றை செய்ய முயற்சி செய்து கொண்டிருந்த அவனுடைய கிரியைகள் அனைத்தும் ஒன்றுமில்லை (naught) என்கிற நிலைக்கு வந்துவிடும் என்ற பாடத்தை தேவன் அவனுக்கு கற்பித்த போதும்கூட, மறுபடியும் உடனே அவர்கள் ஏதோவொன்றை சாதித்துக்காட்டத் திரும்புவதை நாம் கண்டறிகிறோம். வேதாகமமானது, அவர்கள் தங்களுக்கு ஒரு கோபுரத்தைக் கட்டி, வானத்துக்கு ஏறும்படிச் சென்று கொண்டிருந்ததாகக் கூறுகிறது. அவர்கள் வரத்தக்கதாக தேவன் திட்டம் பண்ணியிருந்த அந்த திட்டத்தின் வழியாக வராமல் பரலோகத்திற்கு ஏறிச் செல்வது. 22. மனிதர்கள் ஒன்று கூடும்பொழுது அவர்களால் சிறந்தவற்றை சாதிக்கமுடியும். இப்பொழுது நீங்கள் ஒரு மனிதனை எடுத்துக்கொள்ளுங்கள், அவன் தனித்திருக்கும் பொழுது, தனியொரு மனிதனுக்கொத்த வல்லமை மாத்திரமே அவனிடம் காணப்படும். இரண்டு மனிதர்கள் சேரும்பொழுது அவனுடைய வல்லமை இரட்டிப்பாகிறது, நான்கு மனிதர்கள் சேரும்பொழுது அவனுடைய வல்லமை நான்கு மடங்காகிறது. நாம் ஒன்றாய் இருக்க வேண்டும் என்பதையே தேவன் விரும்புகிறார். நாம் ஒன்றாய் இருக்க வேண்டும் என்றே தேவன் மனிதனை உண்டாக்கினார். நம்முடைய நோக்கம் ஒன்றாய் இருக்க வேண்டும், நம்முடைய குறிக்கோள் ஒன்றாக இருக்க வேண்டும், நம்முடைய சாதனைகள் ஒன்றாய் இருக்க வேண்டும். அந்த வழியாகத் தான் மனிதன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறான். 23. ஜலப்பிரளய அழிவிற்குப் பின்பு, மீண்டும் உடனடியாக மனிதன், தானாகவே கட்டுப்பாட்டை எடுக்கும் முயற்சியைத் தொடங்கியதை நாம் காண்கிறோம். 24. எல்லா நேரங்களிலும், ஜீவிக்கின்ற தேவனுடைய ஆவியானது மாமிசத்தோடு போராடி, மனிதனை அவனுடைய சொந்த சாதனையில் இருந்தும், அவனுடைய சொந்த சுயநலமான நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களில் இருந்தும் விலக்க முயற்சித்து, தேவன் வைத்திருக்கின்றதான ஒரு திட்டத்திற்கு அவனைக் கொண்டு வரும்படி முயற்சி செய்கின்ற காரியங்களானது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மனிதன் தன்னுடைய சொந்தத் திட்டத்தில் கிரியை செய்யும் வரைக்கும் அவன் தோல்வியுற்றவனாகவே இருப்பான். ஒரு மனிதன் சரியான குறிக்கோளோடும், சரியான நோக்கத்தோடும், அதாவது அவனுக்காக உண்டாக்கப்பட்ட தேவனுடைய திட்டத்தின் பிரகாரம் திரும்பி வரும்பொழுது மாத்திரமே அவன் சரியான ஒன்றை அடைய முடியும். மற்ற எந்த அஸ்திபாரமும் புதைமணலின் மீதே உள்ளது. 25. பிறகு நாம், அவர்கள் ஒன்றுகூட முயற்சி செய்து, ஒரே நபர் என்ற நிலையின் கீழ் வரத் தொடங்கினார்கள் என்று காண்கிறோம். ஆனால் அவர்கள் அந்நாளில் நடப்பித்த அந்த ஒன்றுகூடுதலானது, ஒரு அரசியல் சக்தியின் கீழாக இருந்தது. மனிதன் ஒரே கூட்டமாக ஆகிவிட்டான். அவர்களுடைய குறிக்கோள் ஒன்றாய் இருந்தது, அவர்களுடைய சாதனைகள் ஒன்றாய் இருந்தது, ஆனால் அது தவறான ஒன்றாய் இருந்தது. ஏனென்றால் அது தேவனுடைய திட்டத்திற்கு முரணாக இருந்தது. ஆனாலும் அவன் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தான். 26. இறுதியாக, இதேபோல ஜனங்கள் ஐக்கியப்படுவதை நீங்கள் காண்கையில், அவர்கள் மகத்தான காரியங்களைச் செய்கின்றனர். இன்றைய நாளிலே உலகமெங்கும் நீங்கள் கவனிப்பீர்களென்றால், ஜனங்கள் ஒன்றாக ஐக்கியப்படும் போது, அது தவறான திட்டத்தின்கீழ் இருந்தாலும்கூட, அவர்கள் மகத்தான காரியங்களை செய்வார்கள். 27. இப்பொழுது, இன்றைய நாளில் உள்ள நவீன அறிவியல் உலகமானது தங்களுடைய எல்லா இயந்திர சாதனங்களையும் காரியங்களையும் வைத்துக்கொண்டு கட்ட முடியுமா என்று நான் சந்தேகப்படும் அளவுக்கு, அப்படிப்பட்டதான ஒரு கோபுரத்தை அவர்கள் கட்டினார்கள், ஏனென்றால் அவர்கள் ஒன்றாக ஐக்கியம் கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஒரே சிந்தை, ஒரே உணர்வாற்றல் (soul), ஒரே கருத்து, ஒரே நோக்கம், ஒரே குறிக்கோள் இருந்தது, அதாவது,“எப்பொழுதாவது தேவன் மறுபடியும் அவர்களை அழித்துப் போட எண்ணம் கொள்ளும்போது, வானத்திற்குள்ளாக அவரோடு செல்வதற்கு ஏதுவாக, வானளாவிய ஒரு கோபுரத்தை கட்டுவோம். தாங்கள் செய்ய நினைத்ததைத் தடுக்க அவருக்கு எந்த வழியும் இல்லை அல்லது தாங்கள் செய்வதை அவரால் தடுக்க முடியாது” என்பதாக நினைத்துக் கொண்டார்கள். பிறகு அவர்கள் தங்களுக்குள்ளாக ஒன்றுகூடி ஸ்தாபித்துக் கொண்டனர் (organized themselves together) என்று காண்கிறோம். மீண்டும் அவர்கள் முழுமையாக தேவனுடைய சித்தத்திற்கு புறம்பாக இருப்பதையே நாம் காண்கிறோம். 28. மனிதர்கள் ஒன்று சேர்ந்து ஐக்கியப்பட முயற்சித்துக் கொண்டிருப்பது, இன்றைய நாளின் ஒரு அழகான காட்சியாக இல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும்? நாம் நிச்சயமாகவே ஒன்று கூட்டப்பட வேண்டும், ஆனால் அவர்களோ தவறான அமைப்பு முறையின் (system) கீழ் ஒன்று சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். எப்படியாக பிசாசு, தேவனுடைய காரியங்களின் முறைமைகளை மாற்றிப்போடுகிறான் என்று எப்பொழுதாவது நீங்கள் கவனித்ததுண்டா? எப்படியாக பிசாசு, தேவன் செய்யவேண்டுமென்றிருக்கின்ற காரியங்களை, தான் எடுத்துக் கொள்கிறான் என்பதை எப்பொழுதாவது நீங்கள் கவனித்ததுண்டா? 29. ஆகவே வஞ்சித்தல் என்பது தவறான காரியமாய் இருக்கின்றது! இப்பொழுது ஒரு பொய்யானது, அப்பட்டமான பொய்யின் ஒரு பாகமாக இருக்குமென்றால், அது ஒரு பொய் என்பதை எவருமே கண்டறிந்து விட முடியும். ஆனால் அந்த பொய்யில் கிட்டத்தட்ட 99 சதவிகிதம் உண்மை இருக்குமென்றால், அதுபோன்ற ஒன்றுதான் வஞ்சிக்கிறதாயிருக்கிறது. 30. பிசாசு எப்படி ஏவாளை வஞ்சித்தான் என்று நீங்கள் கவனித்ததுண்டா? ஒரே ஒரு காரியத்தைத் தவிர பிசாசு அவளிடம் கூறின எல்லாமே உண்மையாக இருந்தது. “உங்கள் கண்கள் திறக்கப்படும், நீங்கள் நன்மை தீமை அறிவீர்கள்” என்றும், அது போன்ற இன்ன பிற காரியங்களையும், “நீங்கள் தேவர்களைப் போல் இருப்பீர்கள், இப்பொழுதோ நன்மை தீமை அறியாதவர் களாயிருக்கிறீர்கள்” என்றும் கூறினான். அந்த எல்லா காரியங்களுமே உண்மையாய் இருந்தன. 31. ஆனால் அவள், “நாங்கள் ‘சாகவே சாவோம்' என்று கர்த்தர் சொன்னார்” என்று கூறினபோது, அவன் பிரதியுத்தரமாக, “நீங்கள் சாகவே சாவதில்லை” என்றான். பாருங்கள், அதில் எவ்வளவு அதிகமான உண்மைகளும் பின்னர் ஒரு சிறு பொய்யும். 32. இயேசு பூமியில் இருந்தபோது, “புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்” என்றார். அது மிகவும் சரியானதாக இருக்க வேண்டும் அல்லது அது முற்றிலும் சரியானதாகவே இருக்காது. மீட்பின் திட்டமானது முற்றிலும் சரியானதாக இருக்கவேண்டும். தேவனுடைய வாக்குத்தத்தங்கள் முற்றிலும் சரியானதாக இருக்கின்றன, அவைகள் சரியான முறையில் இயங்கவும் செய்கின்றன. அப்படியில்லையென்றால், எங்கேயோ ஏதோவொன்று தவறாக இருக்கிறது. ஜீவிக்கின்ற தேவனுடைய சபை என்ன செய்ய வேண்டும் என்று தேவன் நோக்கம் கொண்டிருந்தாரோ, அதை அவர்கள் அடையவில்லையென்றால், அந்த அமைப்பு முறையில் எங்கேயோ ஏதோவொரு தவறு இருக்கின்றது. சரியானதாக இருக்க வேண்டும்! 33. ஒரு கடிகாரத்தைப் போலுள்ள நேர்த்தியான ஒரு சிறு இயந்திரத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். அந்த இயந்திரத்தின் ஒவ்வொரு சிறு பகுதியையும் ஒரே இசைவில் (harmony) வேலை செய்ய விடுங்கள். அது மிகச் சரியான நேரத்தை காண்பிக்கும். ஆனால் அதில் ஒரு சிறு பாகமானது இயக்கத்தில் மாறும்போது, மற்றவைகளும் மாறி, சரியான நேரத்தைக் காண்பிக்காது. அதில் பயன்படுத்தப்படும் ஜூவல் கற்கள் (jewels) எவ்வளவு நன்றாக இருந்தாலும் அது காரியமல்ல, அவைகளெல்லாம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். [jewels - ஜூவல் கற்கள் என்பது கடிகார பற்சக்கரங்களில் சமநிலையை பெறுவதற்காக பதிக்கப்படுகிறது - மொழிபெயர்ப்பாளர்). ஆகவே நாம் ஒன்று சேர்ந்து ஒரே கூட்டமாய் இருக்க வேண்டும் என்பதே நம்மைப் பற்றி தேவன் கொண்டிருக்கின்ற நோக்கமாய் இருக்கிறது. 34. ஆனால் எப்படியாக பிசாசு அங்கே காரியங்களை சித்தரிக்கிறான் (patterns) என்று நாம் காண்கிறோம். நீதி தாறுமாறாக்கப்பட்டதே எல்லா அநீதிகளுமாயிருக்கிறது. ஒரு பொய் என்பது உண்மையை மாற்றிக் கூறுவதாகும். தேவன் செய்வது நன்மையான காரியங்கள்; நன்மையான காரியங்கள் தாறுமாறாக்கப்பட்டதே தவறான காரியங்களாகும். ஆகையால், அநீதி என்பது நீதி தாறுமாறாக்கப்படுவதாகும். சாத்தான் தானாக எதையும் சிருஷ்டிக்க முடியாது. அவன் வெறுமனே தேவன் சிருஷ்டித்ததை எடுத்துக்கொண்டு அதைத் தாறுமாறாக்குகிறான். மனிதன் தன் மனைவியோடு வாழ்வது முற்றிலுமாக சரியானதே. ஆனால் மற்றொரு ஸ்திரீயை எடுத்துக்கொள்வது தாறுமாறாக்கப்பட்ட அதேக் காரியமாய் இருக்கிறது. அது மரணமாய் இருக்கிறது. ஒன்று ஜீவனைக் கொண்டுவருகிறது, மற்றொன்று மரணத்தைக் கொண்டுவருகிறது. அந்த வழியாகத் தான், சாத்தான் தன்னுடைய கைகளில் வைத்திருக்கின்ற எல்லா காரியங்களுமே, வெறுமனே தேவன் உண்டாக்கினவைகளை எடுத்து அதை மாற்றிப் போட்டதேயாகும். 35. முகமதிய மார்க்கத்தைக் குறித்து நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? முகமதுவின் கல்லறையில் கிட்டத்தட்ட 2000 வருடங்களாக ஒரு வெள்ளைக்குதிரை சேணம் பூட்டப்பட்டிருக்கிறது; ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும், காப்பாளன் (guard) மாற்றப்பட்டு மற்றொரு வெள்ளைக் குதிரை கொண்டுவரப்படும். அதை அவர்கள் பயபக்தியுடன் செய்து, ஏதோ ஒரு நாளில் முகமது எழுந்து உலகத்தை கீழ்ப்படுத்துவார் என்ற நிலையான நம்பிக்கையில் அவ்வாறு செய்கின்றனர். அவர்கள் அதை நம்புகின்றனர். ஏன் அது வெள்ளைக் குதிரை என்று எப்பொழுதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? “இயேசு வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்தவராக வருவார் என்றும், இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே” என்றும் வேதவாக்கியம் கூறுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? சேனைகள் பின்தொடர ஒரு வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி வானங்களில் வருபவர் கர்த்தராகிய இயேசுவே. அந்த தாறுமாறாக்கப்பட்ட மதமோ அதை மாற்றி, வெள்ளைக் குதிரையின்மேல் முகமது என்பதாக மாற்றிவிட்டதை உங்களால் காண முடிகிறதா? ஆனால், இயேசு வானங்களில் வந்துகொண்டிருக்கிறார்; முகமது பூமிக்குரியவன். ஆகவே தேவன் உன்னதங்களில் கிரியை செய்கிற வேளையில், பிசாசு பூமிக்குரிய காரியங்களோடு கிரியை செய்கிறான். 36. பாபிலோன் கோபுரத்தை யாக்கோபின் ஏணியோடு ஒப்பிட்டு எப்பொழுதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? எப்படியாக அவர்கள் வானத்தை அளாவும் கோபுரத்தைக் கட்டி, அதை சுற்றி படிக்கட்டுகளை வைத்துக் கட்ட முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அது, தூதர்கள் வானத்துக்கும் பூமிக்கும் ஏறி இறங்கும்படி, வானத்துக்கும் பூமிக்குமாக வைக்கப்பட்டிருந்த யாக்கோபின் ஏணியின் தாறுமாறாக்கப்பட்ட ஒன்றே ஆகும். அதைத் தாறுமாறாக்குதல்! 37. எல்லா தேசங்களையும் ஒரு ஒன்றிணைக்கப்பட்ட வல்லமையின் கீழாக, ஒரு மகத்தான பெரிய சகோதரத்துவத்தை ஏற்படுத்தும்படிக்கு, இப்பொழுது முயற்சி செய்து கொண்டிருக்கின்ற ஐக்கிய நாடுகளைக் குறித்து எப்பொழுதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? ஐக்கியப்படுவது என்பது நல்லதுதான், ஆனால் அது ஒரு தவறான காரியத்தின் கீழாக இருக்கிறது. அனைத்து தேசங்களையும் சாத்தானே கட்டுப்படுத்துகிறான். உலகத்தை ஆட்சி செய்பவன் சாத்தானே என்று வேதம் கூறுகிறது. பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய் உலகத்தின் சகல ராஜ்யங்களையும் காண்பிக்கும் போது, அவன், “இவைகள் என்னுடையவைகளே” என்றான். அதை மறுக்கும்படியாக இயேசு எதையும் கூறவில்லை. ஏனென்றால், அவைகள் அவனுடையதாய் இருக்கிறது. அந்த காரணத்தினால்தான் நாம் யுத்தங்களையும் கொலைகளையும் உடையவர்களாக இருக்கிறோம். ஏனென்றால் இந்த உலகத்தின் ராஜ்யங்கள் பிசாசினால் கட்டுப் படுத்தப்படுகிறது. இவைகள் பிசாசினால் கட்டுப்படுத்தப்படுகின்ற வரைக்கும், நாம் ஒருவரோடொருவர் யுத்தங்களையும் சண்டைகளையும் கொலைகளையும் உடையவர்களாய் இருப்போம். 38. ஆனால் யுத்தங்களே இல்லாத ஒரு ராஜ்யம் வர நாம் எதிர்பார்த்திருக்கிறோம். அந்த ராஜ்யத்திலே கிறிஸ்து வருவார். அங்கே சதாகாலமும் சமாதானம் உண்டாயிருக்கும். 39. ரஷ்யாவிலே, அவர்கள் ஒரு தவறான பெந்தெகொஸ்தேவை உடையவர்களாய் இருக்கின்றனர் என்பதை நீங்கள் சிந்தித்ததுண்டா? அது பிசாசினுடைய கிரியையாருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் அனைத்துமே பொதுவானது என்கிற கம்யூனிசத்திற்குள்ளாக வரும்படிக்கு எல்லா மனிதர்களையும் கட்டாயப்படுத்துகின்றனர். அதுதான் பெந்தெகொஸ்தே நாளின்போது பரிசுத்த ஆவியின் கீழாக இருந்த சபையின் நிலைமை என்பதை நீங்கள் அறிவீர்களா? ஜனங்கள் தங்களுக்கு சொந்தமானதை விற்று, அதன் கிரயத்தை சீஷர்களின் பாதத்திலே வைத்தார்கள். அவனவனுடைய தேவைக்குத் தக்கவாறு சீஷர்கள் பகிர்ந்து கொடுத்தனர். இப்பொழுதோ பிசாசு அதை எடுத்தவனாய், உலகத்திற்குள்ளாக அதைக் கொண்டு சென்று, அவ்விதம் செய்யும்படி மனிதனைக் கட்டாயப்படுத்த, ஒரு அரசியல் வல்லமையை உண்டாக்கி விட்டான். 40. தேவன் எந்த ஒன்றையும் செய்யும்படி மனிதனை கட்டாயப்படுத்துகிறதில்லை. நீங்கள் உங்களுடைய சுயசித்தத்தின்படியே அதை செய்கிறீர்கள். அவர் உங்களை எச்சரித்து ஒரு தடுப்பை (barricade) உங்களுடைய பாதையின் குறுக்கே எறியலாம். ஆனால் நீங்கள் உங்களுடைய சொந்த தீர்மானத்தோடு அவரை உங்கள் இரட்சகராக்கும் பொருட்டு நீங்களாகவே அவருடைய பிரசன்னத்தில் நடக்கிறீர்கள். ஆனால் சாத்தானோ தன்னுடைய சொந்த திட்டத்திற்காக தேவனுடைய திட்டங்களை தாறுமாறாக்கியிருக்கிறான். 41. கத்தோலிக்கமும், கத்தோலிக்க சபையும் எல்லா நபரையும் கத்தோலிக்கர்களாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறதைக் குறித்து நீங்கள் சிந்தித்ததுண்டா? அது கிரியை செய்யாது. அது மனிதனால் உண்டாக்கபட்ட செயல்முறை திட்டத்தின் (man-made program) கீழாக இருக்கிறது. 42. பிராட்டஸ்டெண்டு சபையானது சபைகளின் கூட்டமைப்பின் கீழாக இருந்துகொண்டு இந்த எல்லா சிறிய சபைகளையும் வெளியே தள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறதைக் குறித்து எப்பொழுதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? நீங்கள் சபைகளின் ஐக்கியத்தை சார்ந்தவர்களாக இல்லாவிடில் உங்களால் சபைக்கு போக முடியாது என்கிற நிலை வரும். பின்பு இதுபோன்றுள்ள சிறிய இடங்கள் அதற்காக நிச்சயம் கிரயம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், “பயப்படாதே சிறு மந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தை கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்” என்று கூறுகிற ஒரு வேதவாக்கியம் நமக்கு இருக்கிறது. அதற்காகவே நாம் காத்திருக்கிறோம். 43. மேலும் நீங்கள் கவனிப்பீர்களென்றால், இவைகளனைத்தும் சத்துருவினால் அடைய முயற்சி செய்யப்படுகின்ற சாதனைகளாயிருக்கின்றது, ஆனால் அவைகள் தவறான திட்டத்தின் கீழாக இருக்கிறது. அது அவனுடைய சொந்த திட்டத்தின் கீழாக இருக்கிறது, இருப்பினும் அவனிடத்தில் எந்த ஒரு மூல (original) காரியமும் இல்லை. அதைச் செய்வதற்கு, அவன், தேவன் செய்திருக்கின்றதான ஏதோவொன்றை எடுத்து, பிறகு அதை அநீதியாக தாறுமாறாக்க வேண்டியவனாயிருக்கிறான். 44. இன்றைய நாளிலே அவர்கள் உலகத்தைத் தாறுமாறாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது ஒரே சகோதரத்துவத்தின் கீழ் வர, உலகத்தை ஒரு மகத்தான தேசங்களின் கூட்டமைப்பாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு மனிதன் உண்டாக்கின ஏமாற்று வேலையாக (disguisement) இருக்குமானால், அது ஒரு தலைவனை உடையதாயிருக்கும், பிசாசு அவர்கள் எல்லாருக்கும் தலைவனாய் இருக்கிறபடியால், அந்த தலைவன் பிசாசாகவே இருப்பான். 45. தேவனுடைய ராஜ்யம் இந்த பூமிக்குரியதல்ல. தேவனுடைய ராஜ்யம் நம்முடைய இருதயங்களில் இருக்கிறது. நாம் அதற்குள்ளாகப் பிறக்கும்படியாக அது ஒரு ஆவிக்குரிய ராஜ்யமாயிருக்கிறது. இயேசு, “தேவனுடைய ராஜ்யம் வருகிறது, அது பலவந்தம் இல்லாமல் வருவதில்லை. மேலும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது” என்று கூறினார். பரிசுத்த ஆவி, தேவனுடைய ராஜ்யம், மனிதனுக்குள் அசைவாடி, அவனை ஆட்கொண்டு, அவனை கட்டுப்படுத்துவதே அந்த ராஜ்யமாகும். 46. மேலும், இந்த தேசங்கள் சமாதானத்தைக் குறித்துப் பேசிக்கொண்டு, ஒருவரையொருவர் அழிப்பதற்கு ஆயத்தமாக, தங்களுக்குப் பின்னாக ஆயுதத்தை (with the knife behind them) வைத்தவர்களாய், ஒருவரையொருவர் வஞ்சிக்கும் வகையில் சென்று கொண்டிருக்கின்றனர் என்பதை நாம் காண்கிறோம். 47. ஒரு சில நாட்களுக்கு முன்பு, மகத்தான மனிதரான ஒரு மதகுருவிடம் பேசுவதற்கான சிலாக்கியம் எனக்கு உண்டாயிருந்தது. தேசங்களில் இருக்கிற சிறந்த விஞ்ஞானிகளில் சிலர், ஒரு இரகசியமான குறிப்பிட்ட நபர்கள் மாத்திரம் கலந்து கொள்ளும் கூட்டத்தை நடத்தும் விதமாக கலிபோர்னியாவில் அவர்கள் ஒன்றுகூடி சந்தித்துக் கொண்டனர். அப்படிப்பட்டதான கூட்டம் மிகவும் பயங்கரமானதாக இருக்கும் நிலையில், அவர்கள் தங்களோடு ஒரு மதகுருமாரையும் கூட்டத்திற்கு அழைத்திருந்தனர். என்னுடைய நண்பரான அந்த மதகுரு என்னிடம், "சகோ. பிரன்ஹாமே, நான் உள்ளே கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு நான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர்கள் என் முப்பாட்டியார் வரைக்கும் உள்ள என்னுடைய பதிவேட்டை தேடி ஆராய்ந்தனர். மேலும் நான் அங்கு இல்லாமல் இருந்திருந்தால் நலமாக இருந்திருக்கும். அந்த விஞ்ஞானிகள் எழுந்து பேச ஆரம்பித்தனர். ஒரு குளிர்ந்த பனிக்கட்டி வீட்டில் நீங்கள் இருக்கும்போது உங்களுக்கு ஏற்படுகிற உணர்வு போல, ஒரு இருண்ட நம்பிக்கையற்ற சூழ்நிலை அந்த அறையில் இருந்ததைப் போல் காணப்பட்டது, எவ்வளவாய் அது ஒரு மனிதனுடைய இரத்தத்தையே உறைய வைக்கிறதாயிருக்கிறது! அந்தக் காரியங்களைக் குறித்துப் பேசக் கூடாது என்ற உறுதிமொழியின் கீழ் நாங்கள் இருக்கிறோம்” என்றார். 48. மேலும் அவர், “இருப்பினும் இதை மாத்திரம் கூற நான் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்” என்றார். மேலும் அவர், “இராணுவத்தையும், விமானப் போக்குவரத்தையும், விமானப் படைகளையும் மற்றும் அதுபோன்ற இன்ன பிற காரியங்களையும் அவர்கள் விலக்கிவிட திட்டமிட்டு கொண்டிருக்கின்றனர். இதற்குமேல் அவைகள் அவர்களுக்கு அவசியம் இல்லையாம்”, “ஒரு நொடிப் பொழுதில் முழு பூமியையும் அழித்துவிடக் கூடிய மிகவும் கொடிய ஆயுதங்களை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்” என்றார். பின்பு, “இந்தக் காரியங்களை அவர்கள் வெளியே தெரியப்படுத்தினால் ஜனங்கள் பீதியடைந்து வீதிகளுக்கு ஓடிப்போய் தங்கள் சத்தத்தை உயர்த்தி கதறிக் கொண்டிருப்பார்கள்” என்றார். மேலும், “பூமியில் விழுந்து வெடிக்கும் போது 175 மைல்களை சுற்றியும், 100 அடி ஆழத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு குண்டை (bomb) அவர்கள் கொண்டிருக்கிறார்கள்” என்றார். 49. உங்களால் எங்கே சென்று மறைந்து கொள்ள முடியும்? ஆயிரம் அடி ஆழத்திற்கு உங்களால் தோண்ட முடிந்தால் ? உங்களால் முடியாது. பூமியின் எரிமலை வெடிப்புகளுக்குள் நீங்கள் போய்விடுவீர்கள். நீங்கள் பூமிக்கடியில் ஆயிரம் அடிகள் தோண்டுவீர்களானால், தலையின் மீது அடிப்பது போன்ற ஒரு பாதகமான சூழ்நிலையால் மூளை அதிர்வு ஏற்பட்டு (a concussion), நீங்கள் சுக்குநூறாக நொறுக்கிப் போவீர்கள். 50. மேலும் அவர், “இந்த ஒரு மகத்தான விஞ்ஞானி எழுந்து நின்றார், அவர்தான் அந்த விஞ்ஞானிகள் கூட்டத்திலேயே மேலான விஞ்ஞானி. அந்த விஞ்ஞானி எழுந்து நின்று, ‘சான்றோர்களே! நான் ஒரு பழைய மாட்டையும் ஒரு வண்டியையும் எடுத்துக்கொண்டு மலைகளுக்கு பின்னால் ஓட்டிச்சென்று, இவையெல்லாவற்றையும் மறந்துவிட்டு என்னுடைய சிறு காலத்தை பூமியின் மீது கழித்துவிட்டு பின்னர் கடந்து சென்று விட்டால் நலமாயிருக்கும்' என்று சொல்லி, மேலும், ‘ஆனால் நாம் அதனை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். மலைக்கு பின்னால் ஓட்டிச் செல்வது என்பது எந்த ஒரு நன்மையையும் பயக்காது. இந்த மலைகள் எல்லாம் தூள்களாகவோ அல்லது எரிமலை சாம்பலாகவோ மாறுவதைத் தவிர வேறெந்த சாத்தியக் கூறும் இல்லை ' என்று கூறினார்” என்றார். 51. ஓ, சகோதரனே! அப்படிப்பட்ட நேரங்களில் நீங்கள் தப்பித்துக் கொள்வதற்கான இடம் எங்கே இருக்கிறது என்பதை நீங்கள் அறியும்படிக்கே அது உணர்த்துகிறது. நமக்கு ஒரு தப்பிக்கும் வழி உண்டு. நமக்கு ஒரு அடைக்கலம் உண்டு. அந்த அடைக்கலமானது கர்த்தருடைய நிரந்தரமான பாதுகாப்பின் செட்டைகளின் கீழாக இருக்கிறது; அணுக்களால் செய்யப்படாத, நீரக வாயு அல்லது பிராண வாயுவினால் (hydrogen or oxygen) செய்யப்படாத அல்லது இந்த பூமியில் உள்ள எந்த ஒன்றினாலும் செய்யப்படாத, ஒரு மரிக்கமுடியாத, அழிவில்லாத ஆத்துமாவை நீங்கள் உடையவர்களாய் இருக்கிறீர்கள் என்பதை அறிந்திருக்கிறோம்; அது ஆவியினாலே உண்டாக்கப்பட்டிருக்கிறது, சர்வவல்லமையுள்ள தேவன் தாமே அதை சிருஷ்டித்து உங்களுக்கு கொடுக்கிறார். 52. எப்பேர்ப்பட்ட ஒரு நாளில் நாம் ஜீவித்து கொண்டிருக்கிறோம்? மனிதன் சாதித்து காட்டின என்னே ஒரு நேரமாய் இது அமைந்துள்ளது. மனிதன் தானே இந்தக் காரியங்களையெல்லாம் அடைந்து தீருமட்டும் தொடர்ந்து அதைத் சாதித்துக் காட்டினான். இப்பொழுது அவன் இவைகளை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறான்? 53. நீங்கள் பாருங்கள், சாத்தான் ஒரு மனிதனுடைய தலையை உபயோகிக்கிறான். ஏதேன் தோட்டத்திலேயே ஒரு மனிதனுடைய தலையை, அதாவது அவனுடைய சிந்தையை எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதை சாத்தான் தெரிந்து கொண்டான். மேலும், அவன் அந்தக் காரியத்தை சபை வரைக்கும் கொண்டு வந்திருக்கிறான். பாருங்கள், பிசாசு ஒரு மனிதனுடைய தலையை எடுப்பதன் நிமித்தம் அவனுடைய கண்ணை அவன் உபயோகிக்க முடியும். நீங்கள் கவனிப்பீர்களானால், மனிதன் ஆவிக்குரியவனாக, உண்மையாகவே மறுபடியும் பிறந்தவனாக இல்லாவிடில், தன் கண்களினால் என்னத்தைப் பார்க்க முடியுமோ, அதை அப்படியே எடுத்துக் கொள்வான், ஜீவனத்தின் பெருமை. அவன் சென்று, அநேக மனிதர்கள் சொல்கிறபடி, நான் ஏதோவொன்றை சாதிக்கப் போகிறேன் என்று சொல்லி, ஒரு சபையைச் சேர்ந்து கொள்ளவே விருப்பங்கொள்கிறான். அவன் மதப்பற்று உடையவனாய் இருக்க விரும்புகிறான். அவனால் தேடிக் கண்டுபிடிக்கும் அளவுக்கு மிகப்பெரிய சபையை அவன் கண்டடையும் வரை அவன் சுற்றிலும் தேடுகிறான். ஏனெனில் மனிதன் ஏதோ ஒரு பெரிய காரியத்தையே செய்ய விரும்புகிறான். அவன் தன்னுடைய பெயரை பெரிதுபடுத்தவே விரும்புகிறான். அதுவே ஒரு மாம்சபிரகாரமான, முட்டாள்தனமான மனிதனின் யோசனையாயிருக்கிறது, அதாவது, “ஓ, நான் மாத்திரம் ஒரு ஸ்தாபனத்தைப் பெற்றிருப்பேனானால்! என்னால் மாத்திரம் என்னுடைய ஸ்தாபனத்திற்கு ஆயிரக் கணக்கானவர்களை சேர்க்க முடிந்தால், இந்த தேசத்திலுள்ள ஸ்தாபனங்களிலேயே அது தான் பெரியது என்பது போல இருக்குமே!” அது என்ன நன்மையை செய்யப் போகிறது? அவன் அநேகரை சேர்த்துக் கொண்டிருக்கிறபடியால், தான் ஏதோ ஒன்றை சாதித்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்கிறான். 54. சில ஆண்டுகளுக்கு முன்னர், 1944-ம் ஆண்டு என்று நான் நம்புகிறேன். என்னவென்றால், “44-ல் பத்து லட்சத்துக்கும் அதிகமாக” என்ற முழக்கத்தை (slogan) பாப்டிஸ்டுகள் கொண்டிருந்தனர். பத்து லட்சத்துக்கும் அதிகமான அங்கத்தினர்களை அவர்கள் பெற்றபோது, அவர்கள் எதைக் கொண்டிருந்தனர்? அவர்கள் உண்மையாகவே மறுபடியும் பிறந்த கிறிஸ்துவின் சீஷர்களாக இல்லாவிடில், அது ஒரு விடுதியில் சேர்ந்து கொள்வதைப் போலத் தான் இருக்கும். அவர்கள் பெயரளவில் மாத்திரம் பாப்டிஸ்டுகளாய் இருந்தனர். 55. மற்ற ஸ்தாபனங்களான லுத்தரன், பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தே மற்றும் மற்ற எல்லா ஸ்தாபனங்களையும் நோக்கிப் பாருங்கள். அவைகளும் அது போலவே இருக்கின்றன. அவர்கள் ஏதோ காரியத்தை அடைய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏதோ மகத்தானதை செய்ய விரும்புகிறார்கள். பாருங்கள்? ஏனென்றால், அவனுடைய கண்ணை வைத்து அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். தன்னுடைய கண்ணை உபயோகித்து அவன் சிந்திக்கிறான். அது, அவன் செய்யக்கூடாத காரியம் என்பதை அநேக நேரங்களில் அவன் புரிந்து கொள்வதில்லை. ஆனால் பிசாசு, மனிதனுடைய கண்களை உபயோகித்து, ஏதோ ஒரு அழகான காரியத்தை அவனுக்குக் காண்பிக்கிறான். அதை நோக்கிப் பார்க்கும்படியாக அவனுடைய கண்களைத் திறக்கிறான். மனிதனுடைய அறிவுசார்ந்த (intellectual) சிந்தனைக்குள்ளாகவும், சபைக்குள்ளாகவும் அவன் அதைக் கொண்டு வருகிறான். 56. சில காலத்திற்கு முன்பு, மகத்தான சுவிசேஷகராகிய பில்லி கிரஹாம் (Billy Graham) இங்குள்ள லூயிவில் (Louisville) என்னுமிடத்தில் நின்று கொண்டு, அவருடைய வேதாகமத்தைப் பற்றிப்பிடித்து, “இது தேவனுடைய நியமம் (standard)” என்றார். அவர் கூறினது சரியே. அவர் மிகச் சரியாகக் கூறினார். சுவிசேஷகராகிய மொர்தெகாய் ஹேம் (Mordecai Ham) என்பவரும், நானும் ஒரே மேஜையில் உட்கார்ந்துக் கொண்டிருந்தோம் (என்னுடைய பழைய கெண்டக்கி வீடு). மொர்தெகாய் ஹேம் மூலம் பில்லி மனமாற்றம் அடைந்திருந்தார். நாங்கள் அங்கே அமர்ந்து கொண்டிருந்தோம். அவர், “என்ன சம்பவிக்கிறது”? என்று கேட்டார். அதற்கு அவர், “பவுல் ஒரு நகரத்திற்குச் சென்று ஒருவனை மனந்திரும்பச் செய்து, பின்னர் ஒரு வருடம் கழித்து திரும்பி வந்த போது, மனமாற்றமடைந்த அந்த ஒருவன் முப்பது பேரை மனமாற்றம் அடையும்படி செய்திருந்தான். நான் ஒரு நகரத்திற்குள் பிரவேசித்து இருபதாயிரம் பேரை மனமாற்றம் அடையும்படி செய்கிறேன். ஒரு வருடம் கழித்து திரும்பி வரும் போது, இருபது பேரைக் கூட காணமுடிவதில்லை . ஏதோ காரியம் தவறாக இருக்கிறது” என்றார். அவர், “அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? கட்டிடங்களிலும், அலுவலகங்களிலும், உங்களுடைய பாதத்தை சாய்வு மேஜையின் (desk) மீது போட்டவாறு உட்கார்ந்து, ஜனங்களை சந்திக்கச் செல்லாத சோம்பேறிப் பிரசங்கிமார்களாகிய நீங்கள் தான்” என்றார். 57. “பில்லி, அது ஒரு மிகவும் நல்ல அறிவு சார்ந்ததாய் உள்ளது” என்று நான் நினைத்தேன். ஆனால் அது அவ்விதம் இல்லை. தயவுசெய்து அவ்வாறு என்னிடம் எடுத்துக்கூற (quote) வேண்டாம். எந்த ஊழியக்காரர்கள் பவுல் மனந்திரும்பச் செய்த அந்த நபரிடம் சென்றனர்? 58. காரியம் அதுவல்ல, இங்கே தான் காரியம். ‘அவைகள் மகத்தான கூட்டங்கள்' என்பதாக இன்றைக்கு பெயரளவில் அழைக்கப்படுகின்ற கூட்டங்கள், மனிதனின் அறிவு சார்ந்த பாகத்தின் மீது மாத்திரமே கிரியை செய்கிறது. ஒரு மனிதன் ஒரு எழுப்புதலின் நேரத்திற்குள்ளாக (spell) வந்தவனாய், “ஆம், நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறும் போது, அவன் ஒரு மகத்தான கூட்டத்தில் இருக்கிற உணர்வினால் அதை ஒரு அறிவுப் பூர்வமாகவே செய்கிறான். அங்கே அவனுக்கு முன்பாக மகத்தான ஊழியக்காரர்கள் இருக்கின்ற காரணத்தால், அவன் அதை செய்கிறான். ஆனால் அது ஒரு அறிவு சார்ந்த எண்ணமாக மாத்திரமே இருக்கிறது. அந்த மனிதன் முன்னேறிப் போகவே முடியாது. அவன் தன்னுடைய சிந்தையிலிருந்து தன்னுடைய இருதயத்திற்கு வந்து, மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக இருக்க வேண்டும், இல்லையென்றால், அவனால் சோதனைக்கு நிற்கவே முடியாது. 59. அறிவு சார்ந்த எண்ணம் சரிதான்; ஆனால், ஞாபகம் கொள்ளுங்கள்; கண்ணானது அதன்பேரில் நோக்கும்போது, பிசாசு உன்னுடைய கண்ணை உபயோகிக்கிறான். ஏதேன் தோட்டத்தில், பிசாசு கிரியை செய்யும்படிக்கு மனிதனுடைய தலையைத் தெரிந்து கொண்டான் என்று அது நிருபித்தது, ஆனால் தேவன் மனிதனுடைய இருதயத்தையே தெரிந்து கொள்ளுகிறார். மனிதனால் பார்க்க முடிகிற ஏதோ ஒரு காரியத்தை அவன் கண்களுக்கு பிசாசு காண்பித்து, “காண்பதையே நம்பு (seeing is believing)” என்று கூறுகிறான். 60. ஆனால், தேவன் ஒரு மனிதனிடம் வரும்போது, அவர் அவனுடைய இருதயத்திற்குள் வருகிறார். மேலும், அவனுடைய கண்கள் காணமுடியாத காரியங்களை, விசுவாசத்தின் மூலமாக அவன் தன்னுடைய இருதயத்தில் நம்பும்படி செய்கிறார். ஏனென்றால், “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” என்று வேதம் கூறுகிறது. 61. தேவன் இங்கே (இருதயம் - மொழிபெயர்ப்பாளர்) கிரியை செய்கிறார்; சாத்தான் இங்கே (தலை - மொழிபெயர்ப்பாளர்) கிரியை செய்கிறான். இப்படியிருக்க இந்தப் பெரிய பாடசாலைகளும், இறையியல் பள்ளிகளும் என்ன நன்மையை செய்யப் போகிறது? எப்பொழுதுமே இல்லை என்றாலும் பெரும்பாலான நேரங்களில் அது இங்கிருந்து (இருதயத்திலிருந்து - மொழிபெயர்ப்பாளர்) அங்கே (தலை - மொழிபெயர்ப்பாளர்) இழுத்துக் கொள்கிறது. ஆனால் அதுவோ அங்கிருந்து (தலை - மொழிபெயர்ப்பாளர்) எடுக்கப்பட்டு இங்கே கீழே மனிதனுடைய இருதயத்தில் வைக்கப்பட வேண்டியதாயிருக்கிறது. 62. வேதாகமம், “ஒரு மனிதனுடைய இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்” என்று கூறுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். 63. “ஒரு மனிதனுடைய இருதயத்தில் சிந்திப்பதற்கு அங்கு ஒன்றுமே இல்லை என்ற நிலையில், அங்கே மனஞ்சார்ந்த உள்ளார்ந்த திறன்கள் (mental faculties) உள்ளதாகக் கூறும் விஷயத்தில் தேவன் எவ்வளவு முட்டாள்தனமாய் இருந்தார்” என்று பண்டைய நாத்திகனும் (infidel), குறை கூறுபவனும் (critic) கூறுவது வழக்கம். 64. ஆனால் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு, மனிதனுடைய இருதயத்தில் ஒரு சிந்திக்கின்ற மனத்திறன் உள்ளதாக விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ளது. ஒரு உயிரணு கூட இல்லாத ஒரு சிறிய இடம், ஒரு சிறிய அறை அங்கே இருக்கிறது; மனித இருதயத்தில் ஒரு சிறு பகுதி. அது எந்த ஒரு விலங்கிலும் அல்லது மற்றெந்த ஜீவனிலும் காணப்படவில்லை . ஆனால் மனிதனுடைய இருதயத்தில் அங்கு ஒரு சிறிய இடம் இருக்கிறது, மேலும் அது என்னவென்பதைக் குறித்து அவர்களால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை . ஆனால், இறுதியாக அவர்கள், “அது ஆத்துமா தங்குகின்ற இடம்” என்று கூறினார்கள். 65. எப்படியாக தேவன் தம்முடைய வார்த்தையை சரியாக உரைத்திருக்கிறார், அதாவது “ஒரு மனிதனுடைய இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்.” அவனுடைய தலையின் நினைவின்படி அல்ல. தலை என்பதை பொருள்பட கூறியிருப்பாரானால், அவர் தலை என்றே கூறியிருப்பார். அவரோ, “அவனுடைய இருதயம்” என்றே கூறினார். 66. மோசே கிட்ட வந்தபோது, “உன் பாதரட்சையைக் கழற்றிப் போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி” என்று தேவன் கூறினதற்கு மோசே பிரதியுத்திரமாக, “ஒரு நிமிடம் பொறுங்கள் கர்த்தாவே, நீர் என்னுடைய தொப்பியைத் தான் குறிப்பிட்டீர் என்று எனக்கு தெரியும்; நான் என் தொப்பியை கழற்றுவேன், அது இன்னும் அதிக பக்தியாய் இருக்குமல்லவா” என்று ஒருவேளை மோசே கூறியிருப்பாரானால் அது எப்படியாயிருக்கும்? அவர் “தொப்பி” என்று கூறவேயில்லை . அவர் ‘பாதரட்சை' என்றுதான் கூறினார். பாதரட்சை என்பதையே அவர் பொருள்பட கூறினார். 67. அவர் கைகளைக் குலுக்குவதையோ மற்றும் சபையைச் சேர்ந்து கொள்வதையோ பொருள்படும்படி ஒருபோதும் கூறினதில்லை. அவர், “நீ கட்டாயம் மறுபடியும் பிறக்க வேண்டும். அது உன்னதத்திலிருந்து வருகின்றதாய் இருக்கவேண்டும்” என்றே கூறினார். ஒரு புத்தகத்தில் உன் பெயரைச் சேர்ப்பதல்ல, ஆனால் மறுஉற்பத்தி செய்யப்பட்டவனாய், உன்னுடைய ஆத்துமா மனமாற்றப்பட்டு, நீ முற்றிலும் புதிதாக உண்டாக்கப்படுவதாகும். 68. இப்பொழுது, இந்த அனுபவத்தை மனிதன் பெறாதிருந்தபோதும், சிருஷ்டிப்பில் இன்னும் அவன் ஒரு தேவகுமாரனாகவே இருக்கிறான், ஒரு விழுந்துபோன தேவகுமாரனாக இருக்கிறான். அந்தக் காரணத்தினால் தான் அவனால் மரங்களை எடுத்து கட்டிடங்களை உருவாக்க முடிகிறது. அவனால் இரும்புகளை எடுத்து இயந்திர சாதனங்களை உருவாக்க முடிகிறது. ஜூவல் கற்களை உபயோகித்து கடிகாரங்களை உருவாக்க முடிகிறது. அவனால் என்ன செய்ய முடியும்? மூல சிருஷ்டிப்பிலிருந்து ஏதோ ஒரு காரியத்தை எடுத்து அதனுடைய மூல நிலையிலிருந்து மாற்றம் செய்து மகத்தானதொன்றாக உருவாக்க முடியும். ஆனால் அவனால் சிருஷ்டிக்க முடியாது. தேவனால் மட்டுமே சிருஷ்டிக்க முடியும், அவர் மாத்திரமே சிருஷ்டிக்க முடியும். 69. இதிலிருந்து நாம் கவனிக்கிற காரியம் என்னவென்றால், சாத்தான் மனிதனுடைய தலையை தெரிந்துகொண்டு, மனிதனுடைய அறிவு சார்ந்த பாகத்தை எடுத்துக்கொண்டான். ஆகவே இப்பொழுது சபையானது மனிதனின் அறிவு சார்ந்த பாகங்களில் அசையத் தொடங்கியிருக்கிறது. "ஓ! இது ஒரு மகத்தான சபை, எங்களுக்கு ஒரு மகத்தான ஸ்தாபனம் இருக்கிறது. தேசத்திலேயே நாங்கள் தான் மிகவும் பழமையானவர்கள்.” ஆனால் சகோதரனே, புருஷனோ ஸ்திரீயோ அல்லது பையனோ பெண்ணோ, முற்றிலும் மனந்திரும்பும் வரைக்கும் அவன் அறிவு சார்ந்த கருத்துக்களையே எடுத்துக் கொண்டவனாய், “வேதாகமம் இவ்விதம் கூறவில்லை. வேதாகமம் அவ்விதம் கூறவில்லை . அற்புதங்களின் நாட்கள் கடந்து போயிற்று, இவ்விதமான காரியங்களுக்கு ஒத்த எந்த ஒரு காரியமும் அங்கே இல்லை, அங்கே அந்த காரியம் சரியல்ல, அந்த நாட்கள் கடந்து போயிற்று” என்பதாகக் கூறுகிறான். ஏனென்றால் அவன் அதை அறிவுப்பூர்வமான விதத்தில் நோக்கிக்கொண்டிருக்கிறான். 70. ஆனால் அதே மனிதன், தன்னுடைய தலையில் வைத்திருக்கிற சொற்ப அளவு அறிவை எடுத்து, அதை தேவனிடத்தில் கொடுத்து, ஜீவிக்கின்ற தேவனுடைய ஆவி அவனுடைய இருதயத்திற்குள்ளாக இறங்க அனுமதிப்பானானால், அவன் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் ‘சத்தியம்' என்றும், ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் ‘தெய்வீகம்' என்றும் அழைப்பான். பிறகு அவன் தேவனுக்காக ஏதோவொன்றை சாதிக்க முடியும். 71. நீங்கள் பாருங்கள்! மனிதனுடைய இருதயத்தில் இருக்கிற சிறிய பாகமான அங்குள்ள அந்த சிறிய அறையை, தேவன் தமக்கென்றே உண்டாக்கினார். அதுவே அவருடைய கட்டுப்பாட்டு அறை. உங்களை ஆண்டுகொள்ள அவர் அங்கே இருக்கிறார். அது அவருடைய இடம். அந்த கட்டுப்பாட்டு அறையிலிருந்து தான் அவர் தம்முடைய செய்திகளை அனுப்புகிறார். 72. பிசாசினுடைய ஆவியின் சுபாவம் அந்த கட்டுப்பாட்டு அறையில் இருக்கும்போது எப்படி தேவனால் உங்களைக் கொண்டு கிரியை செய்ய முடியும்? “பூமியில் பிறக்கிற எல்லா மனிதர்களும் பாவத்தில் பிறந்து அக்கிரமத்தில் உருவாகி பொய்களைப் பேசுகிறவர்களாய் உலகத்திற்கு வருகிறார்கள்.” அதுசரி. ஆகையால், சரீரப் பிரகாரமான ஆதாமுடைய சுபாவத்தில், தன்னுடைய அறிவு சார்ந்தவைகளின் மூலமாக மாத்திரம், எப்படி ஒரு மனிதனால் எதையாவது அடைய முடியும்? 73. ஆனால் அவன் புதிய சிருஷ்டிப்பிற்குள் வரும்போது, பழைய மனிதன் கடந்து போய் புதிய மனிதனாக மாறி, கிறிஸ்து அந்த மனிதனுடைய இருதயத்திலிருக்கும் தம்முடைய சிங்காசனத்தை எடுத்துக்கொள்ளும் போது, அவனுடைய ஜீவியம் வித்தியாசமாக காணப்பட்டு, பின்னர் ஒரு புதிய சாலையின் மீது தன் பயணத்தை அவன் தொடங்குகிறான். அவனுடைய சொந்த சுய நோக்கங்களிலிருந்தும், இன்னுமாக தன்னை ஒரு பெரியவனாக ஆக்குவதற்கு, தான் வைத்திருந்த திட்டங்களிலிருந்தும் திரும்பி, கல்வாரியை நோக்கி, தேவனைக் கண்டுணர்ந்து கொள்ளும்படிக்கு (தன் பயணத்தை) தொடங்குகிறான். பிறகு அவன் என்னவாயிருக்கிறானோ அவையனைத்தும், அவனுடைய குறிக்கோள், அவனுடைய நோக்கம், அவனுடைய சாதனை, அவன் என்னவாய் இருக்கிறானோ அவையனைத்தையும் முற்றிலுமாக சிலுவையின் மகிமையில் வைக்கிறான். அங்கே தான் கிறிஸ்து மனிதனுடைய ஜீவனுக்காக கிரயம் செலுத்தினார். கிறிஸ்துவே நம்முடைய ஜீவன். 74. அதினிமித்தமே இயேசு, "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தை அவனால் அறிந்து கொள்ளக் கூட முடியாது" என்றார். உங்களால் அதைச் செய்ய முடியாது. அதைச் செய்ய அது உங்களுக்குள் இல்லை. 75. பிறகு ஏன் தேவன் அந்த சிறிய இடத்தை உண்டாக்கினார்? நீங்கள் அங்கே நிரப்பப்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்ற நிலையில் தான் அவர் அதை உண்டாக்கினார். ஏதோ ஒன்றினால் நீங்கள் நிரப்பப்பட்டவர்களாய் இருக்க வேண்டும். நிரப்பப்படுதல் இல்லாமல் நீங்கள் ஒரு மனிதனாக இருக்க முடியாது. ஒரு தீர்மானத்தை எடுப்பதற்காக நீங்கள் கட்டாயப்படுத்தப்படுகிற நேரமானது வந்திருக்கிறது. அது இப்பொழுதே வந்திருக்கிறது. ஏனென்றால் பூமியெங்கிலும் அவ்விதமே கட்டாயப் படுத்தப்படுகிறது. 76. ஊழியக்காரர்கள் விளக்கப் படங்களை (charts) காண்பித்து மிருகத்தின் முத்திரை என்றால் என்ன என்பதை விளக்க முயற்சிக்கிறதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒரு வகையான விளக்கப்படம்; அது ஒரு விளக்கத்தையும் தருவதில்லை. வேதாகமமானது, “தேவனுடைய முத்திரையைப் பெற்றுக் கொள்ளாத யாவரும் மிருகத்தின் முத்திரையைப் பெற்றிருந்தனர்” என்று கூறுகிறது. பூமியின் மீது இரண்டு சாரார் மாத்திரமே உள்ளனர்; ஒரு சாரார் தேவனுடைய முத்திரையைப் பெற்றுள்ளவர்கள் மற்றொரு சாரார் பிசாசின் முத்திரையைப் பெற்றுள்ளவர்கள். தேவனுடைய முத்திரையைப் பெறாத யாவரும் மிருகத்தின் முத்திரையைப் பெற்றவர்களாயிருக்கிறார்கள். அதையேதான் வேதாகமம் கூறுகிறது. 77. ஆகையால், ஒரு தீர்மானத்தைச் செய்ய நீங்கள் கட்டாயப்படுத்தப்படுகிறீர்கள் (சகோ. பிரன்ஹாம் தன்னுடைய கரங்களை ஒருமுறை தட்டுகிறார் - ஆசி). நான் இதை உங்களுக்குள் திணிக்கட்டும் (grind), மூர்க்கத்தனமாக அல்லது இழிவுபடுத்துவதாக இருக்கவேண்டும் என்பதற்காக அல்ல, ஆனால் உங்களுக்கு சத்தியத்தைக் கூறி உங்களை எச்சரிக்கவே இதைக் கூறுகிறேன். அதைக்குறித்து மனிதன் ஏதோவொன்றைச் செய்யத்தான் வேண்டும். அது உங்களுக்கு... உங்கள் மீது கட்டாயப்படுத்தப்படுகிறது (forced). நீங்கள் கட்டாயம் ஒரு தீர்மானத்தை எடுக்கத்தான் வேண்டும். 78. தேவனுடைய வார்த்தையைக் கொண்டு ஜீவிக்கின்ற தேவனுடைய முத்திரை என்னவென்று நான் உங்களுக்கு காண்பிக்க முடிந்தால், நீங்கள் பிறகு அறிந்து கொள்வீர்கள். வேதாகமமானது, எபேசியர் 4:30 -ல் ஒரு முறையும், வேதவாக்கியங்களில் அநேக இடங்களிலும், பரிசுத்த ஆவி தான் தேவனுடைய முத்திரையாய் இருக்கிறது என்று கூறுகிறது. பரிசுத்த ஆவி இல்லாவிடில், நீங்கள் மற்றொரு பக்கத்தை சார்ந்தவராக குறிக்கப்பட்டு விட்டீர்கள். நீங்கள் சார்ந்திருப்பது எவ்வளவு அறிவு சார்ந்த, எத்தனை பெரிய ஸ்தாபனங்களாக இருந்தாலும், நீங்கள் எவ்வளவு தேவ பக்தியுள்ளவர்களாக, எவ்வளவு மதவைராக்கியம் கொண்டவர்களாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. 79. சாத்தானும் அதே விதமாகத்தான் இருந்தான். சாத்தான், பிரிந்திருக்கிற வாலும் (forked-tail) முள்கரண்டி அமைப்புடைய குளம்புகளும் (forked-hoofs) உடையதாய் தோற்றம் கொண்ட ஏதோ ஒரு பெரிய மிருகம் அல்ல. அவன் ஒரு ஆவியாய் இருக்கிறான். வேதாகமம், "கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாய் அவன் அவ்வளவு தந்திரமுள்ளவனாய் இருக்கிறான்” என்பதாக கூறுகின்றது. அவன் மத சம்பந்தப்பட்டவனாய் இருக்கிறான். 80. ஆபேல் இருந்ததைப் போல காயீனும் மத ஈடுபாடுடையவனாக இல்லையா? ஆபேல் காணிக்கை செலுத்தின அதேவிதமாக காயீனும் ஒரு காணிக்கையைச் செலுத்தவில்லையா? ஆபேல் கர்த்தருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டின அதே விதமாக காயீனும் கர்த்தருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டவில்லையா? ஆபேல் ஆராதித்த அதே விதமாக காயீனும் ஆராதனை செய்யவில்லையா? ஆபேல் பலி செலுத்தின அதே விதமாக காயீனும் பலி செலுத்தவில்லையா? ஆனால் ஒருவன் அறிவு சார்ந்த எண்ணத்தோடு வருகிறான், அவன் வெளியின் கனிகளையும் பூக்களையும் கொண்டுவந்து, தன்னுடைய பலிபீடத்தை அழகானதாகவும் அறிவு சார்ந்ததாகவும் உருவாக்கினான். 81. ஆனால் ஆபேலோ, விசுவாசத்தினால் ஒரு ஆட்டுக்குட்டியை தெரிந்து கொண்டான். ஏனென்றால் தேவையாயிருந்தது இரத்தமும் ஜீவனுமே. அவன் அந்த ஆட்டுக்குட்டியை ஒரு பாறையினிடத்திற்கு இழுத்துக் கொண்டு வந்து, அது மரித்துப் போகுமளவிற்கு இரத்தம் சிந்தத்தக்கதாக அதனுடைய சிறிய தொண்டையை ஓங்கி அடித்தான். தேவன், “அந்த நீதிமானாகிய ஆபேல்” என்று கூறினார். அது சரியே. அது அவனுக்கு எப்படி வந்தது? வெளிப்பாட்டினால். அறிவாற்றலினால் அல்ல. தன் இருதயத்தின் வழியாக அதை அவன் அறிந்திருந்தான். 82. இயேசு, “இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” என்று கூறினார். ஆவிக்குரிய வெளிப்பாடு! ஆவிக்குரிய கருத்துருவாக்கம்! “மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; தேவனோ இருதயத்தைப் பார்க்கிறார்” என்று வேதாகமம் கூறுகிறது. 83. நீங்கள் ஏதோ ஒன்றினால் நிரப்பப்பட்டிருக்கிறீர்கள். ஒருவேளை நீங்கள் சந்தேகத்தினால் நிரப்பப்பட்டிருக்கலாம். உங்களுடைய பரிதாபமான இருதயங்கள் சந்தேகத்தினால் ஓடிக்கொண்டிருக்கலாம். அவ்விதம் இருக்காது என்று நான் நம்புகிறேன். ஒருவேளை உங்களுடைய இருதயங்கள் வருத்தத்தினாலும் கவலையினாலும் நிறைந்திருக்கலாம். ஒருக்கால் உங்களுடைய இருதயங்கள் முழுவதும் பிரச்சனைகளால் நிறைந்திருக்கலாம். 84. ஒருக்கால் நீங்கள் மதப்பற்று நிறைந்தவர்களாக, அறிவாற்றல் நிறைந்தவர்களாக, நல்ல மெருகேற்றப்பட்ட வேதசாஸ்திரத்தில் நிறைந்தவர்களாக, வருடக்கணக்காக இருந்து வருகிற மகத்தான சபையைச் சார்ந்தவராக, உங்களால் முடிந்த அளவு நம்பிக்கை கொண்ட நபராக, அங்கே பின்னாக அமர்ந்து கொண்டிருக்கலாம். சகோதரனே, நான் உங்களுக்கு இதைக் கூறட்டும். நீங்கள் வயதாகி மரிக்குமட்டும், சபைக்கு அங்கத்தினர்களைக் கொண்டு வரலாம், மற்றுமொரு பாபேல் கோபுரத்தை எழுப்புவதைத் தவிர நீங்கள் வேறெதையும் செய்ய மாட்டீர்கள். நிச்சயமாகவே! 85. நீங்கள் முட்டாள்தனத்தினால் நிறைந்தவர்களாக இருக்கமுடியும், நீங்கள் அர்த்தமற்ற காரியங்களால் நிறைந்தவர்களாக இருக்க முடியும், நீங்கள் எந்த ஒன்றினாலும் நிறைந்தவர்களாகவும் இருக்க முடியும், ஆனால் நீங்கள் வெறுமையானவர்களாக இருக்க முடியாது. வேதாகமம் அவ்விதமே கூறுகிறது. 86. வேதம், “அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டு புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல், திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடு கூட்டிக்கொண்டு வருகிறது. அந்த மனுஷனின் முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை எட்டு மடங்கு அதிக கேடுள்ளதாயிருக்கும்” என்று கூறுகிறது. 87. அதேக் காரியம் தான் இந்த கூட்டங்களிலும் நடந்தேறுகிறது. ஜனங்கள் எழுப்புதல்களில் முன் சென்று, அறிவு சார்ந்த எண்ணத்திற்கு வழி நடத்தப்படுகிறார்கள். அவன் வெளியே சென்று, ஏதோ ஒரு சபையில் சேர்ந்து கொண்டு, அதிலேயே திருப்தியாகி தொடர்ந்து இருக்கிறான். “அதெல்லாம் சரிதான், இந்த மற்ற அர்த்தமற்ற காரியங்களுக்கு அங்கே ஒன்றுமில்லை. நாம் அதை உடையவர்களாயிருக்கக்கூடாது” என்கிறான். மேய்ப்பர், “ஓ, அவ்வளவுதான். முன்னொரு காலகட்டங்களில் அவ்விதம் இருந்தது” என்று கூறுகிறார். முதலாவது காரியம் உங்களுக்கு தெரியுமா, அந்தப் பிசாசு மற்ற ஏழு பிசாசுகளோடு திரும்ப வருகிறான், பின்னர் அவன் ஒரு, மதசம்பந்த சத்துருவாக மாறி போகிறான். பின்னர் அவன் உண்மையாகவே நிரப்பப்பட்டவனாய் இருக்கிறான். பிறகு அவன் கர்வமும் பொறாமையும் கொள்ளுகிறான். வேதாகமத்தை எழுதின அந்த தேவனிடமே அவன்... அவன்... அவன் கோபப்பட்டு, அவன் கீழே நோக்கி பார்த்து, “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்' என்பது சீஷர்களுக்கானது” என்று கூறுகிறான். 88. இயேசு, “நீங்கள் உலகமெங்கும் போய் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்” என்றார், சபைக்கான அவருடைய கடைசி கட்டளை அதுவே. “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்.” எதுவரையிலும்? “உலகமெங்கும்.” யாருக்கு? “சர்வ சிருஷ்டிக்கும்.” “அவர்களில் சிலரை இந்த அடையாளங்கள் பின்தொடரும்” என்பதாகவா? “விசுவாசிக்கிறவர்கள் எல்லோரையும் இந்த அடையாளங்கள் பின்தொடரும்” என்று வேத வாக்கியம் கூறுகிறது. “என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள். சர்ப்பங்களை எடுத்தாலும், சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களை சேதப்படுத்தாது: அவர்கள் வியாதியஸ்தர்மேல் கைகளை வைத்தால், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்பதையே இயேசு கூறினார். 89. “விசுவாசிகளை இந்த அடையாளங்கள் பின்தொடரும்”, எதிர்மறையாய் நினைக்கிறவர்களை அல்ல, அறிவு சார்ந்த சபை அங்கத்தினர்களையல்ல, ஆனால் அறிவு சார்ந்த எண்ணத்திலிருந்து இருதயத்திற்கு வந்திருக்கிற, மறுபடியும் பிறந்த விசுவாசிகளையே இந்த அடையாளங்கள் பின்தொடரும். அந்த இருதயமாகிய கட்டுப்பாட்டு அறையில்தான், உங்களுடைய உணர்ச்சிவசப்படுதலை கட்டுப்படுத்துவதற்கும், உங்களுடைய விசுவாசத்தையும் குணாதிசயங்களையும் கட்டுப்பாட்டில் எடுக்கவும், தேவன் தம்முடைய சிங்காசனத்தை எடுத்துக்கொள்ளுகிறார். 90. தேவன் உங்களை நிரப்ப விரும்புகிறார். ஏன் அவர் உங்களை நிரப்ப விரும்புகிறார்? எதைக் கொண்டு அவர் உங்களை நிரப்ப விரும்புகிறார்? அவர் தம்மையே உங்களில் நிரப்ப விரும்புகிறார்; பரிசுத்த ஆவி, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவது! 91. இயேசு, லூக்கா 24:49 -ல் பரிசுத்த ஆவி உங்கள்மீது வரும்போது நீங்கள் பெலனடைவீர்கள் என்பதாக கூறுகிறார். பின்பு எருசலேமிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப் பரியந்தமும் நீங்கள் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள் என்றார். எப்பொழுது? உங்களுடைய முனைவர் பட்டத்தை நீங்கள் பெற்றுக் கொண்டபொழுதா? ஒரு இளங்கலை பட்டத்தை நீங்கள் பெற்றதைக் கண்டபொழுதா? இல்லை, நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டபோதே. அதன் பிறகு நீங்கள் இந்த சந்ததியினூடாகவும், வரவிருக்கிற சந்ததியினூடாகவும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள். 92. பெந்தெகொஸ்தே என்னும் நாளில் பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல வானத்திலிருந்து பரிசுத்த ஆவி இறங்கி வந்து அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பின போது, அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் மத்தியிலே செய்யப்பட்டன. 93. அப்பொழுது அந்த அறிவாற்றல் மிக்கவர்கள், “சகோதரரே! இரட்சிக்கப்பட நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்றார்கள். 94. பேதுரு, “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது” என்றான். 95. அங்கே தான் நீங்கள் நிரப்பப்பட வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். பரிசுத்த ஆவியினால் நீங்கள் நிரம்பினவர்களாயிருக்க வேண்டுமென தேவன் விரும்புகிறார், பின்பு நீங்கள் ஒன்றாக ஐக்கியப்படுத்தப்படுவீர்கள். எதனிடத்திற்கு? ஒரு சபைக்கா? இல்லை ஐயா. நீங்கள் ஒன்றாக ஐக்கியப்படுத்தப்படுவீர்கள். எதனிடத்திற்கு? ஒரு கோட்பாட்டின் கீழா? இல்லை ஐயா. நீங்கள் தேவனோடு ஒன்றாக ஐக்கியப்படுத்தப்படுவீர்கள். அப்பொழுது அவரும் பிதாவும் ஒன்றாயிருப்பது போல நீங்களும் அவரும் ஒன்றாயிருப்பீர்கள். மேலும், தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வாசம்பண்ணுவார். பரிசுத்த ஆவியானவர், கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக இங்கே இருந்தபோது, அவர் நடப்பித்ததான அதே கிரியைகளானது, உங்களுக்குள்ளும் இருந்து செய்யப்படும், ஏனென்றால் அவர் அவ்விதம் செய்வதாகக் கூறியுள்ளார். அப்பொழுது நாம் ஒன்றாயிருக்கிறோம். 96. இயேசு அதற்காக ஜெபித்தார், அவரும் தேவனும் ஒன்றாய் இருக்கிறது போல நாமும் இன்றிரவு ஒன்றாய் இருக்க வேண்டும் என்று நம்முடைய பரலோக ஆண்டவர் ஜெபத்திலே பிதாவை நோக்கி வேண்டிக்கொண்டார். மேலும் அவர்கள் எவ்வளவாய் நெருக்கமாக இருந்தனர்? அவருக்குள்ளாக தேவன் ஆவியாயும் ஜீவனாயும் இருந்தார்! நாம் அவரோடு ஒன்றாயிருப்போமானால், அவருடைய ஆவியும் ஜீவனும் நமக்குள்ளே கொண்டவர்களாயிருப்போம். அப்பொழுது உலகப்பிரகாரமான, மாம்சத்திற்கேற்ற அறிவுசார்ந்தக் கொள்கைகளும், நம்பிக்கைகளும், கோட்பாடுகளும் மங்கிப்போய்விடும்; ஒரு புதிய, உற்பத்தி செய்யப்பட்ட, மறுபடியும் பிறந்த, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் சுத்தமான அனுபவமானது மனித இருதயத்தில் உண்டாகும். அப்பொழுது நீங்கள் ஒன்றாய் இருப்பீர்கள், சகோதரன் என்பவன் உண்மையான சகோதரனாக இருப்பான், சகோதரி என்பவள் சகோதரியாக இருப்பாள். உங்களுடைய குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்கள், நீங்கள் என்னவாயிருக்கிறீர்களோ அவையனைத்தும், நீங்கள் என்னவாக இருக்க முயற்சிக்கின்றீர்களோ அல்லது இருக்க விரும்புகிறீர்களோ அவையனைத்தும் தேவனுடைய ராஜ்யத்திற்காகவே இருக்கும். நீங்கள் எந்த சபையை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், நீங்கள் எங்கே சென்றாலும் அல்லது எதைச் செய்தாலும் அது காரியமல்ல. 97. “பரிசுத்த ஆவி என்பது இன்றைய நாளில் அது ஒரு உண்மையல்ல” என்று கூறுகிற அநேக ஜனங்கள் இன்று இருக்கிறார்கள். 98. பல்லாயிரக்கணக்கானோர், லட்சக்கணக்கானோர், பரிசுத்த ஆவி என்பது மெய்யல்ல என்று கூறிக் கொண்டிருக்கும் வேளையில், பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிற அநேகர் அங்கிருக்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் ஏழையான ஜனங்களாயும், உலகத்தால் புறக்கணிக்கப்பட்டு மனமுடைந்த ஜனங்களாயும், தேவன் தேவனாகவே இருக்கிறார் என்று விசுவாசித்த காரணத்தினால் சபைகளிலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்ட ஜனங்களாயும், ஆனால் அதே சமயம் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள். அவர்கள் நோக்கத்தில் ஒன்றுபட்டிருக்கிறார்கள். அவர்கள் இருதயத்தில் ஒத்திருக்கிறார்கள். யார் அந்த ஜனங்கள்? ஒன்று சேருகின்ற, ஒன்றாய் மாறுகின்ற மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன், கத்தோலிக்கர், யெகோவா சாட்சி, வைதீக சபையார், யூதர்கள் அனைவருமே. ஒரு கோட்பாட்டிற்காக ஒன்றாய் அல்ல, ஒரு ஸ்தாபனத்திற்காக ஒன்றாய் அல்ல, அவைகள் அறிவு சார்ந்த கருத்தின் மூலமாக பிசாசினுடைய கிரியையாயிருக்கிறது. 99. ஆனால் உங்களுக்குள் இருக்கிற தேவனுடைய ராஜ்யமாகிய பரிசுத்த ஆவியின் கிரியை! தேவன் தம்முடைய கட்டுப்பாட்டு அறையாகிய உங்களுடைய இருதயத்தில் இருக்கும் சிங்காசனத்தின் மீது அமர்ந்தவராய், உங்களுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, உங்களுடைய வல்லமைகளைக் கட்டுப்படுத்தி, உங்களுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்தி, ஐக்கியத்திலும் அன்பிலும் உங்களை அவரோடு ஒன்றாக ஆகும்படி உருவாக்கிக் கொண்டிருக்கிறார். தேவன் உங்களை அன்பினால் நிரப்புகிறார். அவர் உங்களை வல்லமையினால் நிரப்புகிறார். அவர் உங்களை ஆவியினால் நிரப்புகிறார். அவர் உங்களைத் தம்முடைய சொந்த தெய்வீக குணாதிசயங்களினால் நிரப்பி, உங்களுடைய மாமிசப் பிரகாரமான சுபாவத்தை அவருடைய சுபாவமாக மாற்றுகிறார். பிறகு இதிலே நீங்கள் கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாக மாறுகிறீர்கள். 100. பிறகு, அன்பு! நீங்கள் வெளியே போகிறீர்கள், பறவைகள் பாடுவது கூட வித்தியாசமாகத் தெரியும். ஓ! கிறிஸ்து வரும் போது அது எவ்வளவு ஒரு வித்தியாசமானதாய் இருக்கிறது? எப்படியாக நீங்கள் பின்னாக நோக்கிப் பார்த்து, “எப்படி அதிலிருந்து நான் விலகியே இருந்தேன்? எப்படி என்னால் அதை புறக்கணிக்க முடிந்தது?” என்று நினைப்பீர்கள். எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது. உங்களுக்கு சத்துருக்களே இல்லை, அவர்கள் எல்லோரும் இனிமையாக தென்படுகிறார்கள். இதுவரை செய்யப்பட்ட எல்லாவற்றையும் உங்களால் மன்னிக்க முடியும். எவ்வளவு கசப்பான எதிரியாயிருந்தாலும், வீதியில் நின்று அவனுக்காக ஜெபித்து, அவனை உங்களுடைய கரங்களால் அரவணைத்து, அவனை தூக்கி எடுக்க உங்களால் முடியும். எந்த கோட்பாடு, எந்த ஸ்தாபனத்தைச் சார்ந்தவனாக அவன் இருக்கிறான் என்பது காரியமல்ல, யாருக்காக கிறிஸ்து மரித்தாரோ அவன் அந்த சிருஷ்டியாக இருக்கிறான். அதைக் கொண்டே நீங்கள் நிரப்பப்பட்டவராய் இருக்க வேண்டுமென தேவன் விரும்புகிறார். அதுவே நிரப்புதலாய் இருக்கிறது. அது தான் ராஜ்யமாயிருக்கிறது. அதிலே தான் நாம் ஒன்றாயிருக்கிறோம். 101. மற்றுமொரு ஸ்தாபனத்தை ஏற்படுத்தவோ, மற்றுமொரு வழிபாட்டு நெறிமுறை அல்லது -- அல்லது கோட்பாட்டை ஏற்படுத்தவோ நாம் ஒன்று கூடவில்லை. தேவனுடைய ராஜ்யத்தைக் கொண்டுவருவதற்கே நாம் ஒன்றாய் இருக்கிறோம். பிறகு, நாம் அவருடைய திட்ட வரைபடம் (blue print) எடுக்கிறோம். மேலும், ஆசீர்வதிக்கப்பட்ட வேதாகமம் ஏதோவொன்றைக் கூறும்போதெல்லாம் உங்களுக்குள் இருக்கிற பரிசுத்த ஆவியானவர், “அது அவ்வண்ணமாகவே இருக்கிறது, அது என்னுடைய வார்த்தையே” என்று சத்தமிடுகிறார். 102. அவன், “பண்டிதர் ஜோன்ஸ் கூறவில்லையா? அதைக்குறித்து என்ன? அல்லது பண்டிதர் இன்னார்-இன்னார் கூறினாரே” என்றெல்லாம் கூறமாட்டான். பண்டிதர் அவ்வண்ணமாய் கூறியிருந்தாலும் அது எந்த ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. 103. அது சத்தியமாயிருக்கிறது என்று இயேசு கூறினார். “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” அப்பொழுது நாம் ஒன்றாக இருக்கிறோம். 104. மெதொடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியனாகிய நீங்கள் எல்லோரும் அல்லது நீங்கள் யாராயிருந்தாலும், நாம் ஒன்றாய் இருக்கிறோம். பிசாசு உங்களுடைய கண்ணை உபயோகிக்க விடாதீர்கள். தேவன் தாமே உங்களுடைய இருதயத்தை உபயோகிக்க விடுங்கள். அது என்னவாக இருக்கிறது என்றும், எது அதை ஏற்படுத்துகிறது என்றும் நீங்கள் நோக்கிப் பார்த்து புரிந்துகொள்ள முயற்சி செய்வீர்களானால், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் போது, “எப்படி அந்த வழியாக அது வரமுடியும்” என்று கேள்வி கேட்கமாட்டீர்கள். நீங்கள் இன்னும் தேவனுடைய வார்த்தையைக் கேள்வி கேட்டு கொண்டிருப்பீர்களானால், தேவன் உங்களுடைய இருதயத்தில் இல்லை என்பதையே அது காண்பிக்கிறது. தேவன் கூறுகிற எந்த ஒன்றையும் குறித்து பரிசுத்த ஆவியானவர் கேள்வி கேட்க மாட்டார். “ஆமென்! ஆமென்! அது அவ்வண்ணமாகவே இருக்கிறது, ஏனென்றால் தேவன் அவ்விதமே கூறினார்” என்றே கூறுவார். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி] 105. ஆபிரகாம் இல்லாதவைகளை இருக்கிறவைகளாக அழைத்தான், ஏனென்றால் தேவன் அவ்வண்ணமாகவே கூறினார். அவன் எழுபத்தைந்து வயதும், சாராள் அறுபத்தைந்து வயதும் உடையவர்களாய் இருந்த போது, அவர்கள் ஒரு குழந்தையைப் பெறப்போவதாக தேவன் அவனிடம் கூறினார். ஏன்! நினைப்பதற்கே அது ஒரு நகைப்பிற்குரியதாக இருந்தது. ஆனால், தேவன் அவ்வண்ணமே கூறினார், மேலும் ஆபிரகாம் ஒரு தேவனுடைய குமாரனாக இருந்தான். அதைப் பற்றி பேசிக்கொண்டே இருபத்தைந்து வருடம் அதிலே நடந்தான். ஒவ்வொரு நாளும் அவன் சாராளை அழைத்து, “எப்படி இருக்கிறாய் அன்பே?” என்பான். 106. “எப்பொழுதும் இருப்பதைக் காட்டிலும், எந்த ஒரு வித்தியாசத்தையும் உணரவில்லை” என்றாள். ஸ்திரீகளுக்குண்டான வழிபாடு நின்றுபோய் அவளுக்கு நாற்பது வருடம் கடந்துவிட்டது. அவள் தன்னுடைய பதினேழாவது வயதிலிருந்து அவனுடன் ஜீவித்து, பிள்ளையில்லாதவளாயிருந்தாள். ஆனால் அவனோ, தேவனை விசுவாசித்தவனாய், அதற்கு முரண்பாடாய், அது அங்கே இல்லாதிருந்த நிலையிலும்கூட, தேவனுடைய வார்த்தையை சத்தியம் என்றே அழைத்தான். முதல் மாதம் கடந்தது. “சாராளே! எப்படி உணர்கிறாய்?” “எந்த மாற்றமும் இல்லை .” அவன், “நல்லது! தேவனுக்கு ஸ்தோத்திரம், எப்படியாயினும் நாம் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளுவோம்” என்றான். ஒரு வருடம் கடந்து போயிற்று. “எப்படி உணர்கிறாய்?” “எந்த மாற்றமும் இல்லை .” “ஆனால் எப்படியும் நாம் ஒரு குழந்தையைப் பெறுவோம்.” 107. வேதாகமம், “ஆபிரகாம் (விசுவாசத்தில்) பலவீனமடைவதற்கு பதிலாக, எல்லா நேரத்திலும் (விசுவாசத்தில்) வல்லவனானான்” என்று கூறுகிறது. அது ஒரு அற்புதத்தைக் காட்டிலும் அதிகமானதாகவே இருந்திருக்கும். தேவன் அவ்விதம் உரைத்தபடியால், அது சம்பவித்தாக வேண்டும். 108. இருபத்தைந்து வருடங்களுக்குப் பின்பு, சாராள் தொண்ணூறு வயதும், ஆபிரகாம் நூறு வயதும் உடையவர்களாயிருந்தபோது, ஒரு நாள் ஒரு தூதன் கீழே இறங்கி வந்து, அவருடைய முதுகுக்கு பின்புறம் கூடாரம் இருந்த நிலையில், ஆபிரகாமை நோக்கி, “நான் உன்னை சந்திக்கப் போகிறேன்” என்றும், மேலும் என்ன நடக்கப்போகிறது என்பதைக் குறித்தும் ஆபிரகாமுக்கு கூறினார். 109. பின்பு, சிறிய ஈசாக்கு பிறந்தான். ஏன்? “தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல், ‘தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.” ஏன்? அது அவனுடைய சிந்தையில் இல்லை; அது அவனுடைய இருதயத்தில் இருந்தது. 110. மனிதனுடைய இருதயத்தில் தேவனுடைய சிங்காசனம் இருக்கிறது. அங்கே தான் நாம் ஒன்றாயிருக்கிறோம், நோக்கத்தில் ஒன்றுபட்டு, சாதிப்பதில் ஒன்றுபட்டிருக்கிறோம். ஒரு மெதொடிஸ்ட் சகோதரன் தேவனுக்காக நூறு ஆத்துமாக்களை ஜெயிப்பாரானால், “ஆமென்! ஆமென்!” ஒரு பிரஸ்பிடேரியனோ அல்லது யாராவது ஒருவர் கிறிஸ்துவுக்காக ஒரு ஆத்துமாவை ஜெயிப்பாரானால், “ஆமென்! ஆமென்!” ஒருக்கால் டாமி ஆஸ்பார்ன் (Tommy Osborn) இந்த வருடம் பத்து லட்சம் ஆத்துமாக்களை ஜெயிப்பாரானால் அல்லது ஓரல் ராபர்ட்ஸ் (Oral Roberts) பத்து லட்சம் ஆத்துமாக்களையும், பில்லி கிரஹாம் (Billy Graham) பத்து லட்சம் ஆத்துமாக்களையும், மற்ற ஒவ்வொரு ஸ்தாபனமும் பத்து லட்சம் ஆத்துமாக்களை ஜெயித்துக்கொள்ளுமென்றால், நான் அதனோடு நின்று ஜீவிக்கிற தேவனை ஸ்தோத்தரிப்பேன். ஏனென்றால் அவரிடம் ஆத்துமாக்களை அனுப்புகிறோம், அதுவே நம்முடைய குறிக்கோளாயிருக்கிறது, தேவனுடைய ராஜ்யமாகிய அதையே தான் நாம் அடைந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். அப்பொழுது நாம் ஒன்றாய் இருக்கிறோம், நாம் ஒருவரோடொருவர் இணைக்கப்பட்டிருக்கிறோம், சகோதரர்களாயிருக்கிறோம். 111. “நல்லது, அவர்கள் மெதொடிஸ்ட் அல்ல, அவர்கள் பாப்டிஸ்ட் அல்ல, அவர்கள் இதுவல்ல அல்லது அதுவல்ல” என்பதாகக் கூறும் பட்சத்தில் உங்களுடைய... உங்களுடைய முழு நோக்கமுமே தவறாக இருக்கிறது. உங்களுடைய குறிக்கோள் மற்றும் நீங்கள் சாதித்தவை அனைத்தும் தவறாக இருக்கிறது; பெரிதாக காண்பிக்க வேண்டுமென்று ஏதோ ஒன்றை நீங்களாகவே உங்களுக்குள்ளாக முயற்சி செய்து கொண்டிருப்பதானது, நீங்கள் வளர்ச்சியற்ற நிலையில் இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். 112. கோதுமை வளர்வதை நீங்கள் எப்பொழுதாவது கவனித்ததுண்டா? கோதுமை நிமிர்ந்து நின்று இவ்வாறு அசைந்து கொண்டிருக்குமானால், ஞாபகம் கொள்ளுங்கள், அங்கே தலையானது அதில் இல்லை. அது காலியாக இருக்கிறது. ஒரு முழுமையாக நிரப்பப்பட்டிருக்கும் தலையானது எப்பொழுதும் வணங்கியே இருக்கும். தேவனுடைய நற்குணத்தினாலும் அவருடைய இரக்கத்தினாலும் நிரப்பப்பட்டு, முழுமையாய் இருக்கிற ஒரு மனிதன், அவன் தாழ்மையில் தன்னுடைய தலையை தாழ்த்துகிறான். “தன்னைத்தான் தாழ்த்துகிறவனை தேவன் உயர்த்துவார். தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான்.” 113. நண்பர்களே! நாம் ஒன்றாய் இருக்க வேண்டும் என்கிற யதார்த்தத்திற்கு மனிதர்களும் ஸ்திரீகளும் விழித்தெழுந்த நேரமாய் இது இருக்கிறது. தேவனும் அவரும் ஒன்றாயிருந்தது போலவே நாமும் ஒன்றாயிருப்பதற்கு இயேசு வேண்டிக்கொண்டார். தேவன் அவருக்குள் இருந்தார். நாம் கிறிஸ்துவை உள்ளே வர அனுமதிப்போமானால், நாமும் கிறிஸ்துவோடு ஒன்றாயிருப்போம். நாம் செய்யக்கூடிய ஒரே ஒரு வழி என்னவென்றால், நம்முடைய இருதயத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையை அவர் எடுத்துக்கொள்ள அனுமதிப்பதேயாகும், பிறகு நாம் ஒன்றாகிவிடுகிறோம். 114. நாம் கிறிஸ்துமஸ் தினத்தை எதிர்நோக்கி இருக்கிறோம். நாம் நேரத்தை அணுகிக் கொண்டிருக்கிறோம். நாம் பயங்கரமான காரியங்களை எதிர்கொள்கிறோம். நாம் எதிர்கொள்கிற இவையனைத்தும், என்ன வந்தாலும் போனாலும், நம்முடைய கட்டுப்பாட்டு அறையில் கிறிஸ்து நம்மை கட்டுப்படுத்திக்கொண்டு, நாம் காணமுடியாத காரியங்களை நாம் விசுவாசிக்கும்படி நமக்கு விசுவாசத்தை கொடுத்து, நம்மை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் வரையில், அவைகள் என்ன வித்தியாசத்தை நமக்கு உண்டுபண்ண போகிறது? தேவன் கூறினார், “நாம்...”... 115. “விசுவாசமானது - நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.” தேவன் உங்கள் மெய்யானதாயிருக்கிறது என்று உங்களுக்கு சொல்லுகிறபடியால் நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள். தேவனுடையதாயிருக்கிற எந்தவொரு ஆவியும் தேவனுடைய வார்த்தையாயிருக்கிற எதையும் எப்பொழுதுமே மறுதலிக்காது. தேவனுடைய ஆவி அவருக்கு சொந்தமானவர்களை அடையாளம் கண்டுகொள்ளும். ஓ! அங்கே ஒரு தேவன் இருக்கிறார் என்றும், அவர் மெய்யானவராய் இருக்கிறார் என்றும் அறிந்து கொள்ளுவதில், நான் எவ்வளவாய் மகிழ்ச்சியுள்ளவனாக இருக்கிறேன்! 116. சில காலத்திற்கு முன்பு, இங்கே இந்தியானாவில் ஒரு பண்ணையில் வளர்க்கப்பட்ட இரண்டு பையன்கள் இருந்தார்கள். அவர்கள் விவசாயம் செய்யும் பையன்களாக, மிகமிக ஏழ்மையான நிலையில் இருந்தனர். அவர்கள் ஒன்றாகவே வளர்ந்து வந்தனர். ஒருநாள் அவர்களில் ஒருவனுக்கு திருமணம் நடந்தது. சில நாட்களுக்குப் பின்பு, மற்றொருவனுக்கும் திருமணம் நடந்தது. 117. அவர்களில் ஒருவன் ஜீவியம் பண்ண பட்டணத்திற்கு சென்றான். அவன் பங்குசந்தைகளில் முதலீடு செய்து, அவனுடைய சிறு வயது போதகத்தை விட்டு விலகினவனாய், தவறான காரியத்திற்குள் சென்றான். அவன் அவைகளில் பங்குபெற்று, செல்வத்தின்மேல் செல்வம் சேர்த்து, இறுதியில் ஒரு கோடீஸ்வரனாக ஆகும்வரை சம்பாதித்தான். பிறகு அவன் சிக்காகோவிற்கு குடிபெயர்ந்து, புகழ்பெற்ற வீதிகள் ஒன்றில் தனக்கென்று ஒரு மாளிகையை கட்டினான். அவனும், அவனுடைய மனைவியும் இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு சென்று, கலப்பு பானங்களை (cocktails) குடித்து, முழு இரவும் வெளியே திரிந்தனர். அவர்களுக்குத் தேவையான எந்தவொன்றையும் வழங்க மேற்பார்வையாளர்களும் (butler) மற்ற ஏனையோரும் அவர்களுக்கு இருந்தனர். இது தான் உண்மையான வாழ்க்கை என்றே அவர்கள் நினைத்தனர். 118. ஆனால் அவ்விதமாக ஜீவிக்கிற ஒரு மனிதனுக்கு சமாதானம் என்பது இருக்காது. ஒரு தொல்லையுள்ள இருதயத்திற்கு சமாதானம் என்பது கிடையாது. பாவம் நிறைந்த இருதயத்தில் சமாதானம் இருக்க முடியாது. ஒரு மனிதன் குடிக்க ஏங்கி, ‘அதுதான் வாழ்க்கை ' என்று அழைத்து, ஏதோவொரு சிறந்த நேரத்தை அவன் பெற்றிருப்பதாக எண்ணிக் கொள்வானேயானால், அது அவனுடைய வெறுமையையே காட்டுகிறது. ஒரு பத்து லட்சம் டாலர்களை சம்பாதிக்கிற ஒரு மனிதனை எடுத்துக்கொள்வோமானால், அவன் இரண்டு மடங்கு சம்பாதிக்க விரும்புகிறான். ஒரு விருந்துக்கு சென்று மதுபானத்தை அருந்துகிற ஒரு மனிதனை எடுத்துக் கொள்வோமானால், அவன் இன்றிரவு வேறொரு மதுபானத்தை அருந்த விரும்புகிறான். ஒரு முறை தன்னுடைய மனைவிக்கு உண்மையில்லாமல் ஜீவிக்கிற ஒரு மனிதனை எடுத்துக்கொள்வோமானால், மறுபடியும் அவன் அவ்வண்ணமே ஜீவிப்பான்; அல்லது மறுபடியும் அவள் அவ்வண்ணமே ஜீவிப்பாள் (vice versa). பாருங்கள், அவன் திருப்தியடைய முடியாத ஏதோவொன்றாய் அது இருக்கிறது. ஒருவேளை அவன் ஒரு பத்து லட்சம் டாலர்களையோ அல்லது ஒரு கோடி டாலர்களையோ தன்னிடம் வைத்திருக்கக் கூடும். அவன் இரவு முழுவதும் குடிபோதையில் திளைத்தவனாய் கிடக்கிறான்; அடுத்த நாள் காலை, பேயறைந்தவனாய், திகில்கனவு கண்டவனாய், கலக்கமுள்ள சிந்தையோடு எழுந்திருக்கிறான். நீங்கள் அதை “சமாதானம்” என்று அழைப்பீர்களா? அதுவல்ல சமாதானம் என்பது. 119. ஆனால் தன் தலையை பொதித்துக் கொள்ள ஒரு தலையணை கூட இல்லாத நிலையில், ஒரு ஜோடி நல்ல காலணிகள் கூட சொந்தமாக கொண்டிராத நிலையில், அல்லது தன்னுடைய வீட்டில் நல்ல உணவை கூட பெற இயலாத நிலையில் ஒரு மனிதன் இருந்தாலும், அவனுடைய இருதயத்தில் தேவன் ஆளுகை செய்வாரானால், அவன் சமாதானமாய் படுக்கைக்குச் சென்று சந்தோஷமாய் எழுந்திருப்பான். அது ஒரு நிலையான சமாதானமாயிருக்கிறது. தேவன் செய்கிற ஏதோவொன்றாய் அது இருக்கிறது. 120. இந்த நபர் அந்தப் போதனையை மறந்து போயிருந்தான். அவன் சூதாட்டத்திற்கு சென்றான். அது கிறிஸ்துமஸ் சமயமாயிருந்தது. அவன் தன் நண்பனை நினைவுகூர்ந்து, அவனுக்கு ஒரு கடிதத்தை எழுதினான். அவர்களில் ஒருவன் பெயர் ஜிம். அவன் தான் அந்த ஐசுவரியவான். மற்றொருவன் ஏழையானவன், அவன் பெயர் ஜான். ஜிம் ஒரு நாள் ஜானுக்கு கடிதம் எழுதி, “ஜான்! இந்த விடுமுறை நாட்களில் நீ என்னை காண இங்கு வரவேண்டுமென நான் ஆசைப்படுகிறேன். நான் உன்னை மீண்டும் சந்தித்து உன்னோடு பேச விரும்புகிறேன். உன்னை சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டது” என்றான். 121. அதற்கு ஜான் தனது பதில் கடிதத்தில், “நான் வர விரும்புகிறேன் ஜிம், ஆனால் என்னால் வர முடியாது, வருவதற்கு என்னிடத்தில் போதிய பணம் இல்லை” என்று எழுதினான். 122. ஒரு சில நாட்களில் தபாலில் ஒரு காசோலை வந்தது, அந்த கடிதத்தில், “எப்படியாயினும் நீ வருவதையே நான் விரும்புகிறேன். வந்துவிடு!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே நாட்டுப்புற பையனான ஜான், ஒரு நல்ல சுத்தமான ஜோடியான (pair) ஆடையை அணிந்துகொண்டு, நாரினால் செய்யப்பட்ட தொப்பியை போட்டுக்கொண்டு, வேறுபட்ட நிறங்கள் கொண்ட ஒரு சிறு மேலாடையை அணிந்துகொண்டு ரயில் வண்டியில் ஏறினான். 123. அவன் அங்கே வந்த போது, அவனை சந்திக்கும்படி, ஒரு சொகுசு வாகனத்தில் விருந்தாளியை கவனிக்க நியமிக்கப்பட்ட ஒருவர் உட்கார்ந்து கொண்டிருந்தான். ஜானுக்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியவில்லை . அவன் அந்த சொகுசு வாகனத்தில் ஏறி தன் தொப்பியை கரத்தில் பிடித்தவனாய் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான். சிகாகோவில் உள்ள ஒரு பெரிய மாளிகைக்கு வாகனத்தை அந்த ஓட்டுநர் ஓட்டிச் சென்றார். 124. அவன் வெளியே இறங்கி, கதவண்டை சென்று அழைப்பு மணியை ஒலிக்கச் செய்தான். ஒரு பணிவிடைக்காரன் வெளியே வந்து, “ஐயா, தயவுசெய்து உங்கள் அட்டையை காண்பியுங்கள்” என்றான். அந்த வேலைக்காரன் தன்னிடத்தில் என்ன பேசிக் கொண்டிருக்கிறான் என்றே ஜானுக்கு தெரியவில்லை. தன் தொப்பியை அவனிடம் நீட்டினான். வரவேற்பு அட்டையைப் பற்றி அவன் ஒன்றும் அறிந்திருக்கவில்லை. இந்த உலகத்தின் காரியங்களைப் பற்றி அவன் அவ்வளவாக தெரிந்து வைத்திருக்கவில்லை. வேலைக்காரனோ, “எனக்கு உம்முடைய அட்டையைக் காண்பிக்க வேண்டும்” என்றான். 125. அதற்கு அவன், “ஐயா, நீர் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறீர் என்று எனக்கு தெரியவில்லை” என்றான். மேலும், “நான் வரும்படி ஜிம் எனக்காக அனுப்பினார். எனக்கு தெரிந்ததெல்லாம் அவ்வளவுதான்” என்றான். 126. ஆகவே அந்த வேலைக்காரன் திரும்பிச் சென்று, இன்னும் தூக்கத்திலிருந்து எழுந்திருக்காமலிருந்த தன்னுடைய கூட்டாளியினிடத்தில் வந்து, “பார்ப்பதற்கு வேடிக்கையாய்த் தோன்றுகிற ஒரு மனிதன் அங்கே கதவண்டையில் நின்றுக் கொண்டிருக்கிறார். அவனைப்போல உடையணிந்த ஒரு மனிதனை நான் இதுவரைப் பார்த்ததே இல்லை, ஜிம் வரச் சொன்னதாக அவன் கூறினான்” என்றான். அதற்கு அவன், “அவனை உள்ளே வரச் சொல்” என்றான். 127. தன்னுடைய குளியல் அங்கியை அணிந்துகொண்டு, முகப்பு அறைக்குச் (hall) சென்று, தன்னுடைய பழைய கிராமத்து நண்பனை சந்தித்து கைகுலுக்கி, “ஜான், உன்னைப் பார்ப்பதில் நான் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறேன் என்று உனக்கு தெரியாது” என்றான். 128. அந்தப் பழைய நாட்டுப்புறத்தான் நின்றுகொண்டு, அறையில் உள்ளதை சுற்றும் முற்றும் பார்த்து, “ஜிம், நிச்சயமாகவே நீ ஏராளமான காரியங்களை உடையவனாயிருக்கிறாய்” என்றான். 129. அதற்கு அவன், “நான் உனக்கு இன்னும் சுற்றிக் காண்பிக்க விரும்புகிறேன்” என்று கூறி, ஜானை மேல்மாடிக்கு கூட்டி சென்றான். சூரிய வெளிச்சம் படும்படி அமைக்கப்பட்ட சூரிய மண்டப அறைக்குச் (sun porch) சென்று ஜன்னலைத் திறந்தான். ஜான் ஜிம்மை நோக்கி, “மார்த்தா (Martha) எங்கே?” என்று கேட்டான். அதற்கு ஜிம், “ஓ! நேற்றிரவு வெளியே சென்றவள் இன்னும் வரவில்லை ” என்றான். அதைக் கேட்ட ஜான், " ஊ! அப்புறம் நீங்கள் இருவரும் எப்படி இருக்கிறீர்கள்?” என்று வினவினான். 130. அதற்கு ஜிம், “ஓ! பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை ” என்றவன், “அப்புறம் நீயும் கேட்டியும் (Katie) எப்படியிருக்கிறீர்கள்?” என்று ஜானைக் கேட்டான். அதற்கு அவன், “நன்றாக இருக்கிறோம்” என்றான். மேலும் ஜிம், “ஓ! அவள் வீட்டிலேயே இருக்கிறாளா?” என்று கேட்டான். 131. அதற்கு அவன், “ஆம், எங்களுக்கு ஏழு பிள்ளைகள் இருக்கிறார்கள்” என்று சொல்லி ஜிம்மிடம், “உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?” என்று கேட்டான். 132. அதற்கு ஜிம், “இல்லை. மார்த்தா குழந்தையைப் பெற்றுக்கொள்ளவில்லை. சமூக வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் என்பதால் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பது நல்லது என்று அவள் நினைத்தாள்” என்றான். பின்னர் திரைச்சீலைகளைத் திறந்து வைத்து ஜானிடம், “இங்கே பார், அதோ அங்கே இருக்கிற அந்த வங்கி உனக்கு தெரிகிறதா?” என்று கேட்டான். அதற்கு அவன், “ஆம்” என்றான். 133. அப்பொழுது ஜிம், “நான்தான் அந்த வங்கியின் தலைமை அதிகாரி” என்றான். மேலும் அவன், “அந்த ரயில் நிறுவனத்தைப் பார்” என்றான். "ஆம்.” "அதில் எனக்கு பத்து லட்சம் டாலர்கள் மதிப்புள்ள பங்குகள் இருக்கிறது” என்றான். 134. ஜான் கீழ் நோக்கிப் பார்த்து அங்கே சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த தோட்டங்களையும் மற்ற எல்லாவற்றையும் பார்ப்பதற்கு அது எவ்வளவு அழகாய் இருந்தது என்பதையும் கண்டான். வைக்கோல் தொப்பியை தன் கையில் பிடித்துக் கொண்டவனாய் அங்கே நின்றுக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான். அவன், “அது அருமையாக இருக்கிறது. ஜிம், நீ இவைகளைப் பெற்றிருப்பதற்காக நான் நிச்சயமாகவே நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்றான். மேலும், “எனக்கும் கேட்டிக்கும் இவ்வளவு அதிகமாக எதுவும் இல்லை ”, “அங்கே கீழேயிருக்கிற அந்த பழைய ஓட்டு வீட்டில் தான் நாங்கள் இன்னமும் குடியிருக்கிறோம். எங்களுக்கு அதிகமான உடைமைகள் இல்லை, இருப்பினும் நாங்கள் அபரிமித சந்தோஷமாக இருக்கிறோம்” என்றான். 135. அப்பொழுது கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி பாடல் குழுவினர் (carol singers) அவ்வழியே வந்தனர். அவர்களுடைய பாடல் சத்தம் உள்ளே கேட்க தொடங்கியது. அமைதியான இரவு, புனிதமான இரவு, இளம் கன்னித் தாய் மற்றும் குழந்தையை சுற்றிலும் எங்கும் அமைதி, எங்கும் பிரகாசம் மிக மென்மையும் சாந்தமுமான பரிசுத்த மழலை 136. ஜிம் திரும்பி ஜானை பார்த்தான். ஜான் ஜிம்மை நோக்கிப் பார்த்தான். அப்பொழுது ஜிம், “ஜான், நான் உன்னிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்க விரும்புகிறேன். நாம் சிறு பையன்களாக இருந்தபோது உனக்கு நினைவிருக்கிறதா, அங்கே சாலையின் பக்கத்திலுள்ள சிவப்பு வர்ணம் பூசப்பட்ட பழைமையான சிறிய சபைக்குப் போவது வழக்கம். அந்த பழைய நாட்டுப்புறப் பாடற்குழுக்கள் இவ்வகையான பாடல்களை பாடுவதை நாம் கேட்போம் அல்லவா?” என்றான். “ஆம்” என்றான். ஜிம், “நீ இன்னும் அங்கு போய்க் கொண்டிருக்கிறாயா?” என்று கேட்டான். 137. அதற்கு ஜான், “ஆம் நான் இன்னும் அந்த சபையைத் தான் சார்ந்திருக்கிறேன். இப்பொழுது நான் அந்த சபையில் ஒரு டீக்கனாக (deacon) இருக்கிறேன்” என்றான். மேலும், “ஜிம், உன்னைக் குறித்து என்ன?” என்று கேட்டு, மேலும், “இங்கே உனக்கு இருக்கும் சொத்துக்களைக் குறித்து என்னிடம் பேசிக் கொண்டிருந்தாய். ஆனால் அந்த வழியில் உனக்குச் சொந்தமாக என்ன இருக்கிறது?” என்று கேட்டான். 138. அதற்கு ஜிம், “ஜான், நான் வருந்துகிறேன். அந்த வழியில் எனக்கு சொந்தமானதொன்றும் இல்லை” என்றான். “ஒரு முறை, கிறிஸ்துமஸ்க்கு சற்று முன்பு நம்மிடத்தில் ஒரு காலணி கூட இல்லாதிருந்தது உனக்கு நினைவிருக்கிறதா? கிறிஸ்துமஸ்-காக பட்டாசுகளை வாங்குவதில் நாம் அதிக ஆர்வம் உள்ளவர்களாக இருந்தோம். கிறிஸ்துமஸ்க்கு சில பட்டாசுகளை வாங்க வேண்டும் என்று சில முயல்களைப் பிடிப்பதற்கு நாம் வெளியே சென்று சில பெட்டி வகை கண்ணிகளை அமைத்தோம். அந்த நாள் காலையில் அந்தப் பெரிய, வயதான காட்டு முயல் உன்னுடைய கண்ணியில் மாட்டிக்கொண்டது உனக்கு நினைவிருக்கிறதா?” என்று கேட்டான். ஜான், “ஆம், எனக்கு நினைவிருக்கிறது” என்றான். 139. “நீ சில பட்டாசுகளை வாங்குவாய். நீ சென்று, சில பட்டாசுகளை வாங்கி, அதை என்னோடு பங்கிட்டாயே” என்றான். ஜான், “ஆம்” என்றான். 140. பின்னர் ஜிம், “ஜான், எனக்கு இருக்கிற எதையும் நான் உன்னோடு பங்கிடுவேன். ஆனால் ஒரு காரியத்தை நீ எனக்கு பிரித்துத் தர விரும்புகிறேன்” என்றான். மேலும், “என்னால் மட்டும் அந்த சிறிய பழைய தூசிபடிந்த சாலையில் வெறுங்காலில், அந்தச் சிறிய பழைய சபையை நோக்கி நடந்துசென்று, அந்த பாடல் குழு பாடல்களைப் பாடி, அந்தப் பண்டையக் காலத்துப் பிரசங்கி பிரசங்கம் செய்து கொண்டிருக்கும்போது, ஜீவிக்கிற தேவனுடைய பிரசன்னத்தை நான் உணர முடிந்தால், எனக்கு சொந்தமான எல்லாவற்றையும் உனக்குத் தருவேன். நான் எந்தவொன்றையும் உனக்கு தருவேன். என்னால் மட்டும் திரும்பச் சென்று, அந்தப் பழைய சாலையில் நான் சென்ற போது, நான் பெற்றிருந்ததான அந்த ஆசீர்வதிக்கப்பட்ட சமாதானத்தை மீண்டும் பெற முடிந்தால், எனக்குச் சொந்தமாய் இருக்கிற எல்லாவற்றையும், இருப்புப்பாதை நிறுவனத்திலுள்ள ஒவ்வொரு பங்கையும், வங்கியில் உள்ள எல்லாப் பங்குளையும், இந்த வீடு மற்றும் எல்லாவற்றையும் நான் தந்து விடுவேன்” என்றான். 141. பழைய நண்பனாகிய ஜான் தன் கரங்களை எடுத்து அவனைச் அணைத்தவாறு போட்டுக்கொண்டான். அவன் ஜிம்மிடம், “அங்கே மூன்று சாஸ்திரிகள் இருந்தார்கள். செல்வந்தரான அவர்கள் ஒருமுறை, குழந்தையாய் இருந்த இயேசுவின் பாதத்தில் வந்து எல்லாவற்றையும் வைத்தனர். அவர்களுடைய பாவத்திற்கான மன்னிப்பை அவர்கள் பெற்றுக் கொண்டனர்” என்றான். மேலும், “ஜிம், செய்யும்படியாய் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள இந்த எல்லாக் காரியத்திலும் நீ அருமையானவனாய் இருக்கிறாய் என்று நான் நினைக்கிறேன். ஆனால் நீ பெற்றிருக்கிறதான இந்த ஐசுவரியத்தை எல்லாம் நான் பெறுவதைக் காட்டிலும் என்னுடைய மனைவி மற்றும் ஏழு பிள்ளைகளோடு அங்கேயே வாழ்ந்து, வைக்கோல் புல்லின் மீது படுத்துறங்கி, என்னுடைய இருதயத்தில் உள்ள சமாதானத்தைப் பெற்றிருப்பதையே நான் விரும்புவேன்” என்று கூறினான். 142. அதுதான் சரியானது, நண்பர்களே! ஐசுவரியங்கள் டாலர்களினால் அளவிடப்படுகிறதில்லை. ஐசுவரியங்கள் பெரிய பெயர்களினாலோ அல்லது பிரபலத்தின் அடிப்படையிலோ அளவிடப்படுகிறதில்லை. ஐசுவரியம் என்பது தேவனுடைய ராஜ்யம் மனித இருதயத்திற்குள்ளாக இறங்கிவந்து, அவனுடைய உணர்வுகளை மாற்றி, கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஒரு புதிய சிருஷ்டியாக அவனை உண்டாக்கி, அவனுக்கு நித்தியஜீவனை அளிக்கும்போது ஏற்படுகிற ஒன்றாயிருக்கிறது. அது ஒன்றுதான் இப்பூமியின் மீது இருக்கக்கூடிய ஐசுவரியமிக்க காரியம். நாம் ஜெபம் செய்வோம். 143. நம்முடைய தலைகள் வணங்கியிருக்கிற வேளையில், இந்த இரவின் பொழுதில், உலகத்தின் காரியங்களைக் குறித்து நீங்கள் ஒன்றுமறியாதவர்களாயிருக்கிறீர்களா? உங்களுடைய கரி-எரிபொருள் ரசீதை அல்லது எண்ணெய் ரசீதை அல்லது அதைவிட மேலானதொன்றை எப்படிச் செலுத்தப் போகிறோம் என்று அறியாதவர்களாயிருக்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் அவ்விதமே இருக்கலாம். நீங்கள் அவ்விதம் இல்லை என்று நான் நம்புகிறேன். அப்படியிருந்தாலும், நீங்கள் அந்த விதமாகவே இருப்பீர் களென்றாலும், இந்த பூமியின்மீது இருக்கிற சந்தோஷமான ஏழை மனிதனாய் இன்றிரவு இக்கட்டிடத்தை விட்டு நீங்கள் வெளியேறலாம். எந்தப் பணத்தைக் கொடுத்தும் விலைக்கு வாங்க முடியாத ஐசுவரியங்களோடு இன்றிரவு நீங்கள் இங்கிருந்து செல்லலாம். நீங்கள் கிறிஸ்து இயேசுவோடு உங்களுடைய இருதயத்தை ஐக்கியப்படுத்த முடியும், அதினிமித்தம் அவர் உங்களுடைய ஆத்துமாவிற்குள்ளாக வந்து, கட்டுப்பாட்டு அறையை எடுத்துக்கொள்வார். எது வந்தாலும் போனாலும் அது ஒரு காரியமல்ல. மீதமுள்ள உங்களுடைய நாட்களிளெல்லாம் நீங்கள் சந்தோஷத்தோடு இருப்பீர்கள். 144. இதுவரை கொடுக்கப்பட்டதிலேயே மகத்தான பரிசாய் இது இருக்கிறது. ஓ! நிச்சயமாகவே நீங்கள் உங்களுடைய நண்பர்களுக்கு கிறிஸ்துமஸ் வெகுமதிகளை அளிக்கிறீர்கள். அது நல்லதுதான். அது ஞாபகசின்னமாய் இருக்கிறது. ஆனால் சகோதரனே! எந்தப் பணத்தினாலும் விலைக்கு வாங்கப்பட முடியாத ஒரு வெகுமதி இன்றிரவு உன்னிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அது தேவனிடத்திலிருந்து வருகிற ஒரு இலவசமான வெகுமதியாயிருக்கிறது; அவருடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே. நீங்கள் அவரை உங்களுடைய சொந்த வழிகாட்டியாக, உங்களுடைய சொந்த இரட்சகராக, உங்களுடைய தேவனாக, உங்களுடைய... உங்களுடைய மீட்பராக, உங்களுடைய ராஜாவாக ஏற்றுக்கொள்வீர்களா? அவர் ஆத்துமாவையும் சரீரத்தையும் சுகப்படுத்துகிறார். அவர் கட்டுப்பாட்டு அறையை எடுத்துக் கொள்கிறார். பயங்களும், சந்தேகங்களும் உங்களுக்கு இருக்குமானால், இப்பொழுதே அவைகளை வெளியே செல்ல விட்டுவிடுங்கள். அவரே இராஜாவாக இருப்பாராக! அவர் உள்ளே வந்து பொறுப்பேற்றுக் கொள்வாராக. அவரே ஆண்டவராக இருப்பாராக. ஆண்டவர் என்பதற்கு ‘ஆளுகை செய்பவர்' என்று அர்த்தம். தலைமைத்துவம் (Lordship) என்றால் அரசாட்சி (rulership) என்று பொருள். 145. நீங்கள், “ஓ! பல வருடங்களுக்கு முன்னதாகவே என்னுடைய இருதயத்தை அவருக்காக திறந்துக் கொடுத்து விட்டேன் என்பதாக நான் நம்புகிறேன்” என்று கூறலாம். 146. ஆனால், எப்பொழுதாவது உங்களுடைய உணர்வுகளையும் உங்களுடைய விசுவாசம் மற்றும் எல்லாவற்றையும் முழுமையாக ஆளுகை செய்வதற்கு அவர் உங்களுடைய ஆண்டவராக மாறி இருக்கிறாரா? நீங்கள் வேதாகமத்தை வாசிக்கையில்.. அதனுடைய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமாய் இருக்கிறது. ஏமாற்றமான விரக்தி வரும்போது உங்களுடைய இருதயத்தில் சமாதானத்தைக் கொண்டிருப்பீர்கள். இன்றிரவு அணுகுண்டானது இந்தப் பூமியை சுக்குநூறாக சிதறடிக்கும் என்பதை நீங்கள் அறிந்திருந்தாலும், சாம்பல்கள் பூமியில் வந்து படிவதற்கு முன்பதாகவே, மகிமையில் கிறிஸ்து இயேசுவுக்குள் நீங்கள் ஒன்று கூட்டப்படுவீர்கள். அப்படிப்பட்ட மனச்சமாதானம் (consolation) உங்களிடம் இருக்கிறதா? அது உங்களிடம் இல்லாமலிருந்து, நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவீர்களென்றால், துரிதமாக, அமைதியாக உங்களுடைய கரத்தை உயர்த்தி, அப்படிச் செய்து, “ஆண்டவரே என் மீது இரக்கமாயிரும். என்னுடைய நோக்கங்களிலும், என்னுடைய குறிக்கோள்களிலும், தேவனுடைய ராஜ்யத்தில், உம்முடைய பிள்ளைகளில் ஒருவனாக, இப்பொழுது நான் உம்மோடுகூட ஐக்கியப்பட விரும்புகிறேன். என்னைப் பற்றிய அனைத்தையும் நீர் அறிந்திருக்கிறீர். கர்த்தாவே, நான் இருக்கிற வண்ணமாக என்னை ஏற்றுக்கொண்டு, உம்முடையவனாக என்னை மாற்றுவீரா?” என்று கேட்பீர்களா? மகனே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஐயா, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களையும், உங்களையும், அங்கேயுள்ள உங்களையும். ஸ்திரீயே உங்களையும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது சரி. 147. பண்டைய காலத்து வகையான மெத்தொடிஸ்ட் சபை மற்றும் அதுபோன்ற இன்னபிற சபைகள், பீடத்தண்டை வருவதிலும் மற்றும் அதைப் போன்ற காரியங்களிலும் விசுவாசம் கொண்டுள்ளனர் என்று நான் அறிவேன். அதெல்லாம் சரியே. சகோதரனே, தேவன் உன்னைத் தொட்டாலொழிய, தேவனை நோக்கி உன் கரத்தை உயர்த்தவோ, அவரிடம் வருவதற்கான ஒரு சிறு அசைவையோ கூட உன்னால் ஏற்படுத்த முடியாது. இயேசு, “பிதா ஒருவனை முதலாவது இழுத்துக் கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வரமாட்டான்” என்று கூறினார். 148. உன்னுடைய கரத்தை உயர்த்தச் செய்த அந்த காரியத்தை நீ மரியாதை செலுத்தி கனப்படுத்தமாட்டாயா? “ஆம் கர்த்தாவே, என்னுடைய இருதயத்திலிருந்து இதை நான் கூறுகிறேன். என்னுடைய ஒவ்வொரு பாவத்தையும் இப்பொழுது நான் உம்முடைய பலிபீடத்தின் மீது இறக்கி வைக்கிறேன். இந்த மணி நேரத்திலிருந்து நான் உமக்காக ஜீவிக்கும்படியாக, இப்பொழுதே உமக்கென்று எல்லாவற்றிலுமிருந்து என்னை வேறுபிரித்துக் கொள்கிறேன். என்னுடைய இருதயத்தை வெறுமையாக்கி, என்னுடைய எல்லா பழக்கவழக்கங்களையும் என்னுடைய எல்லா பாவங்களையும் மற்றும் எல்லாவற்றையும் சரியாக இங்கேயே நான் விட்டுவிடுகிறேன். என்னுடைய இருதயத்தில் முதன்மையானவராக நீர் இருப்பீராக. என்னுடைய இருதயத்தின் ஆண்டவராக நீர் இருப்பீராக. என்னுடைய வாழ்க்கையில் உமக்குரியதாயிருக்கிற இடத்தை நீர் எடுத்துக் கொண்டு என்னை ஆளுகை செய்வீராக” என்று கூறுங்கள். நாம் ஜெபிக்கின்ற இவ்வேளையில் அவ்விதம் கூறுங்கள். 149. “பிதா ஒருவனை முதலாவது இழுத்துக் கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்” என்று எழுதப்பட்டுள்ளதை, கர்த்தாவே, உம்முடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொண்டேன். மனிதன் பத்து வருடங்கள் ஜீவித்து, இருபது, ஐம்பது அல்லது எழுபத்தைந்து அல்லது அதற்கு மேலாக வாழ்ந்தும் கூட இன்னும் வராமல் இருக்கிறான். ஆனால் அவனுடைய பாதையின் குறுக்கே வெளிச்சம் பிரகாசிக்கிற ஒரு நேரம் வருமெனில், அதுவே அந்த சந்தர்ப்பமாக இருக்கிறது. அங்கே இன்னுமாக ஜனங்களை நேசிக்கிற ஒரு தேவன் இருக்கிறார் என்பதற்காக நாங்கள் எவ்வளவாய் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்! இன்றிரவு, தேவனுடைய மகத்தான, மெய்யான கிறிஸ்துமஸ் வெகுமதியான இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்படி அநேகக் கரங்களை உயர்த்தும்படி செய்ததினிமித்தம், அவர் தம்முடைய இரக்கத்தை நமக்கு வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார். இப்பூமிக்கு தேவனால் அனுப்பப்பட்ட அசலான, உண்மையான ஒரே ஒரு கிறிஸ்துமஸ் வெகுமதியானது, அவருடைய ஒரே பேறான குமாரனேயாகும். கர்த்தாவே, இவர்களை ஏற்றுக்கொள்ளும். 150. இவர்கள் மரணத்தருவாயில் தலையணையை அழுத்திக் கொண்டிருக்கிறதான ஒரு நாள் வரும்; அல்லது ஒரு வாகனத்தின் அடியில் சாலையில் முனகிக் கொண்டிருக்கிறதான ஒரு நாள் வரும்; அல்லது தண்ணீருக்குள் மூழ்கி அவர்களுடைய தொண்டையில் தண்ணீர் புகுந்து தத்தளிக்கும் (gurgling) ஒரு நாள் வரும். அவர்களுடைய சேருமிடம் எதுவென்று எனக்குத் தெரியாது. ஆனால், கர்த்தாவே! “என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான், உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” என்ற வார்த்தைகளை இயேசு கூறினார் என்பதை நான் அறிந்திருக்கிறேன். கர்த்தாவே, அது உம்முடைய வார்த்தையே என்று நான் விசுவாசிக்கிறேன். நான் மரித்தாலும் பிழைத்தாலும், நீர் அதைச் சொன்னதினாலே அது இன்னமும் உம்முடைய வார்த்தையாகவே இருக்கிறது. வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் உம்முடைய வார்த்தைகளோ தோல்வியடைவதில்லை. 151. “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை, அவனுக்கு நித்திய ஜீவனை அளித்து, நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்” என்று நீர் கூறினீர். அவன் சமுத்திரத்தில் மூழ்கி போனாலும், அவன் அக்கினியில் எரிந்து போனாலும், பூமியின் நான்கு காற்றுகளிளால் அவனுடைய சாம்பல் அடித்துச் செல்லப்பட்டாலும், “தேவனாகிய கர்த்தர் தாமே பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு எப்பொழுதும் அவருடனே கூட இருப்போம்.” தேவனாகிய கர்த்தாவே, இது நடந்தேறும் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். 152. நீர் தாமதிப்பீரானால், இந்த ஏழையான ஜனங்கள், இன்று இரவு இங்கு கூடியிருக்கிற உலகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஜனங்கள், நீர் இவர்களை எங்கிருந்து எடுத்தீரோ, எங்கே இவர்கள் திரும்பிச் செல்வார்களோ, அந்த மண்ணை நோக்கி தங்களுடைய தலைகளைத் தாழ்த்திய வண்ணம் இருக்கிறார்கள். இவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தி, உமக்கு நேரே தங்கள் கரங்களை உயர்த்திய வண்ணம், “கர்த்தாவே நான் தவறாய் இருக்கிறேன், என்னை ஏற்றுக்கொள்ளும்” என்று கூறியிருக்கிறார்கள். ஓ, உம்மால் எப்படி ஒன்றாகிலும் தரையிலே விழும்படி விடமுடியும்? உம்மால் முடியாது, கர்த்தாவே உம்மால் அதைச் செய்ய முடியாது. தங்களுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து அதை அவர்கள் கூறியிருக்கும் பட்சத்தில், நீர் இவர்களை புறக்கணித்துவிட்டு, தொடர்ந்து தேவனாக இருக்க முடியாது. ஏனென்றால், இவர்கள் உத்தமமாய் வந்திருக்கிறார்கள். இவர்கள் பிதாவினால் உமக்கு அளிக்கப்படுகின்ற ஒரு அன்பின் வெகுமதியாய் இருக்கிறார்கள். 153. உம்முடைய ஊழியக்காரன் என்ற முறையில், நான் அவர்களை உமக்கென்று கட்டளையிடுகிறேன்; அவர்களுடைய ஆத்துமாக்களையும் அவர்களுடைய சரீரங்களையும் அவர்களுடைய ஆவிகளையும் உம்மிடத்தில் ஒப்புவிக்கிறேன். கர்த்தாவே, உம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட பாதுகாப்பிற்குள் அவர்களை வைத்துக்கொள்ளும். அவர்களிலிருந்து எல்லா பொல்லாப்பையும் எடுத்துப்போடும். பாவத்தை எடுத்துப்போடும். பழக்கவழக்கங்களை எடுத்துப்போடும். இன்றிரவிலிருந்து ஒருபோதும் அது அவர்களை தொல்லைப்படுத்தாதிருப்பதாக. தேவனைத் தங்கள் இருதயத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையில் கொண்டவர்களாக, விடுதலைப் பெற்ற ஜனங்களாக இங்கிருந்து புறப்பட்டுச் செல்லட்டும். சத்துரு அவர்களை சோதனைக்கு உட்படுத்தும் போது, தேவன் கட்டுப்பாட்டு அறையில் இருக்கிறார் என்பதை அவர்கள் நினைவுகூறட்டும், தேவன் ஒருவர் மாத்திரமே சத்துருவினிடமிருந்து அவர்களைத் தப்புவிக்கிறவர். 154. கர்த்தாவே, நாங்கள் உம்முடைய ராஜ்யத்தை நிலைநாட்டுவோம். “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களை சோதனைக்குட்படப் பண்ணாமல், கர்த்தாவே, தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும். ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே” ஆமென். 155. அவ்வண்ணமாகவே அது எழுதப்பட்டிருக்கிறது, அவ்வண்ணமே அது நடந்தேறட்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, தங்கள் கரங்களை உயர்த்தின ஒவ்வொருவரும், விசுவாசத்தின் மூலமாக உங்களுடைய இருதயத்திலிருந்து அவரை ஏற்றுக் கொள்ளுங்கள்; உங்கள் கண்கள் சொல்கிறபடியல்ல; “என்னால் அதை விடமுடியாது, என்னால் அதைச் செய்ய முடியாது, அதைச் செய்கிறதை என்னால் நிறுத்த முடியாது” என்று நினைக்கிற உங்கள் சிந்தையின்படியல்ல; அது அறிவு சார்ந்ததாக இருக்கிறது. ஆனால், உங்கள் இருதயத்தின் ஆழத்தில் ஏதோவொன்று, “நீ என்னுடைய உடைமையாயிருக்கிறாய்” என்று கூறுகிறதே. நினைவிருக்கட்டும்! இருதயத்தில் தொனிக்கும் உங்களுடைய சத்தத்திற்கு செவி கொடுங்கள், ஏனென்றால், அது தேவன் உங்களிடத்தில் பேசுகிறதாயிருக்கிறது. மற்ற அனைத்துக் காரியங்களும் மங்குகிற இரவைப் போல மங்கிப் போய்விடும். 156. எது பலம் வாய்ந்தது? இரவா அல்லது பகலா? சூரியன் எழும்பி வரட்டும், இரவுக்கு என்ன சம்பவிக்கிறது என்று பாருங்கள். அது மங்கிப்போய் இல்லாமலேயே போய்விடும். 157. மேலும், தேவனுடைய ஆவி ஒரு மனிதனுடைய இருதயத்திற்குள்ளாக வரும்போது, அவனுடைய எல்லா அறிவாற்றலும் மங்கிப் போகின்றன. இருளும், சந்தேகங்களும் விலகிப் போகின்றன. அதற்கு இடமில்லாத காரணத்தால், அதை இனி உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது. வெளிச்சம் அவனுடைய ஆத்துமாவை நிரப்பியிருக்கிறது. அவன் வெளிச்சத்தில் நடக்கிறான். அவன் ஒரு தேவனுடைய பிள்ளையாயிருக்கிறான், தேவன் அவனை நேசிக்கிறார். இப்பொழுது நான் ஒரு கவியை பாட விரும்புகிறேன். நாமெல்லாருமாக சேர்ந்து, நான் ராஜாவின் ஒரு பிள்ளை ! அந்த ராஜாவின் ஒரு பிள்ளை ! இரட்சகராகிய இயேசு என்னோடு நான் ஒரு ராஜாவின் பிள்ளை ! 158. அந்த வழியாக உணர்கிறவர்கள் எத்தனைபேர்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். “நான் ஒரு ராஜாவின் பிள்ளை” என்ற உணர்வோடு. சிறிது நேரத்துக்கு முன்பு தங்கள் கரங்களை உயர்த்தியிருந்தவர்கள், அவைகளை உயர்த்துங்கள். அதை விசுவாசியுங்கள். அதனோடு தரித்திருங்கள். தேவன் உங்களுடைய இருதயத்தை அறிந்திருக்கிறார். 159. போதகரே, வந்து... என்னால் பாடலில் வழிநடத்த முடியாது, ஆனால் நாம் அந்த பாடலை பாடலாம். நீங்கள் எனக்கு உதவி செய்யுங்கள். செய்வீர்களா? நீங்கள் எல்லோரும், இப்பொழுது ஒன்று சேர்ந்து, நல்லது, நாம் இதை பாடுவோம். இசைக்கு ஒரு ஸ்வரத்தைக் கொடுக்க நம்முடைய சகோதரி முன்பாக வந்து கொண்டிருக்கிறாள் என்று நம்புகிறேன். நான் சுற்றிலும் நோக்கிப் பார்த்தேன், எங்கேயும் அவளைக் காணவில்லை. அந்த காரணத்தினால் தான் நான் அவ்வாறு கூறினேன். “என்னுடைய பிதா வீடுகளையும் நிலங்களையும் உடைய ஐசுவரியவானாக இருக்கிறார், அவர் உலகத்தில் செல்வத்தைத் தம்முடைய கரத்தில் பிடித்திருக்கிறார்” என்ற பாடல் எத்தனைப் பேருக்குத் தெரியும்? அது எவ்வளவு அழகாய் இருக்கிறது என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். சரி. ஒவ்வொருவரும் இப்பொழுது, ஒன்று சேர்ந்து.. பிதாவானவர் வீடுகளிலும் நிலங்களிலும் ஐசுவரியவான் தமது கரத்தில் உலகத்தின் செல்வத்தைப் பிடித்திருக்கிறார்! மாணிக்கம், வைரம், வெள்ளி மற்றும் தங்கத்தால் அவருடைய பொக்கிஷ சாலைகள் நிறைந்துள்ளது, சொல்லிமுடியாத ஐசுவரியத்தை உடையவர். 160. இப்பொழுது மிகவும் அமைதியாக பாடுவோம். நான் ராஜாவின் ஒரு பிள்ளை ! அந்த ராஜாவின் ஒரு பிள்ளை ! இரட்சகராகிய இயேசு என்னோடு நான் ஒரு ராஜாவின் பிள்ளை ! 161. அது அற்புதமானதல்லவா? நீங்கள் அந்த ராஜாவின் ஒரு பிள்ளை என்று விசுவாசிக்கிறீர்களா? அந்த ராஜாவின் பிள்ளைகள் என்று விசுவாசிக்கிற அனைவரும் உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். பரவாயில்லை . நாம் அதை மறுபடியும் பாடுகிற வேளையில், உங்கள் பின்னால் இருப்பவரிடமோ, உங்கள் முன்னால் இருப்பவரிடமோ, உங்களுடைய வலது அல்லது இடது புறத்தில் இருப்பவரிடமோ, அவர்கள் யாராயிருந்தாலும், எந்த நம்பிக்கையை உடையவர்களாயிருந்தாலும், நீங்கள் அந்த ராஜாவின் ஒரு பிள்ளையாய் இருக்கும் பட்சத்தில், அவர்களோடு உங்கள் கரங்களைக் குலுக்க நான் விரும்புகிறேன். நாம் மீண்டும் அதை பாடுவோம். நான் ராஜாவின் ஒரு பிள்ளை ! அந்த ராஜாவின் ஒரு பிள்ளை ! இரட்சகராகிய இயேசு என்னோடு நான் ஒரு ராஜாவின் பிள்ளை ! கூடாரமோ குடிலோ எனக்கென்ன கவலை? அங்கே மாளிகை ஒன்று எனக்காக கட்டுகின்றனர்! மாணிக்கம், வைரம், வெள்ளி மற்றும் தங்கத்தால் அவருடைய பொக்கிஷ சாலைகள் நிறைந்துள்ளது, சொல்லிமுடியாத ஐசுவரியத்தை உடையவர். நான் ராஜாவின் ஒரு பிள்ளை ! அந்த ராஜாவின் ஒரு பிள்ளை ! இரட்சகராகிய இயேசு என்னோடு நான் ஒரு ராஜாவின் பிள்ளை ! இயேசுவைப்போல் இருக்க, இயேசுவைப்போல் இருக்க, அவரைப் போல் இருக்க இப்பூமியில் ஏங்குகிறேன் பூலோகமுதல் மகிமைவரை ஜீவியப்பயணம் முழுதும் அவரைப்போல் இருப்பதையே நாடுவேன் 162. அதுதான் உங்களுடைய வாஞ்சையாய் இருக்கிறதா? [சபையார் ‘ஆமென்' என்கின்றனர் - ஆசி]. அவர் மிகவும் அற்புதமானவர்! எனக்குள் இருக்கிற எல்லாவற்றோடும் நான் அவரை நேசிக்கிறேன். இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்பாக எனக்கிருந்த எல்லாவற்றையும் கர்த்தராகிய இயேசுவுக்கு சமர்ப்பித்து விட்டேன். அது முதற்கொண்டு நான் யுத்தக்களத்தில் இருந்து, அந்த மகிமையின் கிரீடத்தை நோக்கிப் பார்க்கும்படி புருஷர்களையும் ஸ்திரீகளையும் வழிநடத்துவதில் எனக்குத் தெரிந்த அனைத்தையும் நான் செய்துக் கொண்டிருக்கிறேன். 163. கர்த்தருடைய வருகையைக் குறித்து பேசுவதற்கு நீங்கள் செல்வீர்களென்றால்... சில நாட்களுக்கு முன்பு ஒரு மனிதன் என்னிடம், “ஓ பிரசங்கியாரே! அவ்விதம் பேசாதீர்” என்றான். “நீர் ஒரு கிறிஸ்தவரா” என்று கேட்டேன். “ஆம், ஆனால், என்னே! இருப்பினும் நாம் செய்வதற்கு அநேகக் காரியங்களைப் பெற்றிருக்கிறோம்” என்றான். 164. நான், “கர்த்தருடைய வருகையைக் குறித்து என்னால் எண்ணிப் பார்க்க முடிவதே மகிழ்ச்சியான காரியம்” என்றேன். 165. பவுல் பாதையின் முடிவில், “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்” என்றான். 166. என்னால் எதைச் சம்பாதிக்க முடியும்? என்னுடைய அடுத்த கட்டம் என்ன? எனக்கு வயதாகிக் கொண்டே போகிறதே. முழுதும் சீர்கேடான இந்த வயதான, பலவீனமான, வியாதியுற்ற சரீரம், ஒருநொடிப் பொழுதில், ஒரு இமைப்பொழுதில் மறுரூபமாக்கப்படும். நான் எப்பொழுதும் இளமையாகவே இருப்பேன். மீண்டும் எனக்கு வியாதியின் நேரம் என்பதே இருக்காது. நான் ஒருபோதும் கண்ணீர்விட்டு அழமாட்டேன். எனக்கு எப்பொழுதும் வயது அதிகமாகவே ஆகாது. நான் ஒருபோதும் மரிக்க மாட்டேன். நான் ஒருபோதும் வியாதியாய் இருக்க மாட்டேன். எனக்கு ஒருபோதும் இருதய வலி அல்லது கவலையோ இருக்காது. ஆனால் அவருடைய சொந்த மகிமையின் சரீரத்தைப் போல ஒரு சரீரத்தை நான் பெற்றிருப்பேன். நான் ஜீவிப்பதற்கான காரியம் அதுவாக இல்லையென்றால்! எனக்குத் தெரிந்த மகத்தான காரியம் அதுவாக இல்லையென்றால்! “எப்படி நான் அதைப் பெற்றுக்கொள்வேன்?” 167. அது ஒரு இலவச ஈவு. [சகோதரர் பிரன்ஹாம் நான்கு முறை பீடத்தைத் தட்டுகிறார் - ஆசி]. தேவன் தட்டுகிறார், நான், “ஆம், கர்த்தாவே, நீர் என் சிருஷ்டிகர், நான் உம்மை ஏற்றுக்கொள்கிறேன்” என்கிறேன். பரிசுத்தஆவியைக் கொண்டு அவருக்குள் என்னை முத்திரையிடுகிறார், பின்பு இயேசுவையும் அவருடைய இரத்தத்தையும் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை. என் பாவத்தைக் கழுவுவது எது? அது இயேசுவின் இரத்தமே. மீண்டும் என்னை பரிசுத்தம் ஆக்குவதெது? அது இயேசுவின் இரத்தமே. ஓ, விலையேறப் பெற்ற ஊற்றே என்னை பனிபோல வெண்மையாக்கினததுவே; வேறெந்த ஊற்றும் நானறியேன் அது இயேசுவின் இரத்தமே 168. நீங்கள் சந்தோஷமாக இல்லையா? எந்த ஒரு கோட்பாடும் அதைச் செய்ய முடியாதென்று நான் அறிவேன். எந்த ஸ்தாபனங்களும் அதைச் செய்ய முடியாதென்று நான் அறிவேன். எந்த சபையும் அதைச் செய்ய முடியாதென்று நான் அறிவேன். எந்த மனிதனும் அதைச் செய்ய முடியாதென்று நான் அறிவேன். எந்தத் தண்ணீரும் அதைச் செய்ய முடியாதென்று நான் அறிவேன். எந்த வேத சாஸ்திரமும் அதைச் செய்ய முடியாதென்று நான் அறிவேன். இயேசுவின் இரத்தமேயன்றி வேறெதுவும் இல்லை . நீதியுள்ள இயேசுவின் இரத்தத்தைக் காட்டிலும் வேறொன்றின் மீதும் என் நம்பிக்கை கட்டப்படவில்லை என் ஆத்துமாவைச் சுற்றி அனைத்தும் வழிவிடும்போது, அவரே என் முழு நம்பிக்கையும் இருப்பிடமுமானார் அது நீங்கள் தானே? [சபையார் ‘ஆமென்' என்கின்றனர் - ஆசி]. திடமான கன்மலையாகிய கிறிஸ்துவின் மீது நாம் நிற்கிறோம்; மற்ற அனைத்தும் புதைமணலே, மற்ற அனைத்தும் புதைமணலே! 169. இப்பொழுது, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஒரு குழந்தைப் பிரதிஷ்டை இருக்கிறது என்று நான் நம்புகிறேன். (சகோதரர் நெவில், “ஆம்” என்கிறார் - ஆசி). எனவே, இந்த நேரத்தில் பிரதிஷ்டைக்காக ஆராதனையை மேய்ப்பரிடம் ஒப்படைக்கிறேன். சகோதரர் நெவில், முன்னே வாருங்கள். கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக.